This Article is From Dec 12, 2019

தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்த எடப்பாடி: ஸ்டாலின் கடும் கண்டனம்!

பா.ஜ.க.வின் கொள்கைதான் அ.தி.மு.க.வின் கொள்கை என்றால், தனியாக ஒரு கட்சி எதற்கு? அதில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு? அ.தி.மு.க.,வை கலைத்து விட வேண்டியதுதானே!

தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்த எடப்பாடி: ஸ்டாலின் கடும் கண்டனம்!

அ.தி.மு.க. அரசை - அடிமை அரசு என்று கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும்? மு.க.ஸ்டாலின் கேள்வி

சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சார்பில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்நிலையில் இன்று இம்மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அங்கும் நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின

முன்னதாக, நாடாளுமன்ற மக்களவையில், ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள நிலையில், இந்த மசோதா நேற்று முன்தினம் அங்கு தாக்கல் செய்யப்பட்டு எளிதாக நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் விழுந்தன.

இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஆதரவு தெரிவித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் எஸ். ஆர். பாலசுப்ரமணியம், “இலங்கையை விட்டு விட்டீர்கள். இஸ்லாமியர்களை விட்டு விட்டீர்கள். ஆனாலும் நாங்கள் இந்தச் சட்டத்தை ஆதரிக்கிறோம்” என்று கூறி - அ.தி.மு.க.வின் 'இரட்டை வேடத்தை' தன்னை அறியாமல் அவையிலேயே அரங்கேற்றியிருக்கிறார்.

தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கப் பார்க்கிறது அ.தி.மு.க. என்பதற்கு, இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்க முதுகெலும்பு இல்லாமல் பயந்து போய், பணிந்து கிடக்கும் அ.தி.மு.க. அரசை - அடிமை அரசு என்று கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும்?

பா.ஜ.க.வின் கொள்கைதான் அ.தி.மு.க.வின் கொள்கை என்றால், தனியாக ஒரு கட்சி எதற்கு? அதில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு? அ.தி.மு.க.,வை கலைத்து விட வேண்டியதுதானே!

தங்களை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக் கொண்டு ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் பழனிசாமியும், உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களை ஏமாற்றுவது ஏன்?

'வளர்ச்சி', 'முன்னேற்றம்' என்றெல்லாம் வாக்குகளைப் பெற்று - தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க.விற்கு, இந்தியாவில் பேயாட்டம் போடும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியவில்லை; சீரழிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டு செம்மைப்படுத்த இயலவில்லை; பேராபத்தில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பினை மீட்டு - நாடெங்கும் வாழும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட முடியவில்லை.

ஆனால், மதவெறிக் கொள்கைகளைத் தூக்கிப் பிடிப்பதிலும், நாட்டை மத அடிப்படையில் பிரித்தாள்வதிலும், சிறுபான்மையினரை அச்சத்திலும், பீதியிலும் உறைய வைப்பதிலும் - எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர்களின் உரிமைகளை நசுக்குவதிலும், தணியாத தாகங்கொண்டு பா.ஜ.க. ஆட்சி நடத்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

.