This Article is From Jul 03, 2018

பொருளாதாரத்தை மோசமான நிலையில் விட்டது முந்தைய ஆட்சி - பிரதமர் கடும் விமரிசனம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும், நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் பற்றி கடுமையாக பேசியுள்ளார் பிரதமர் மோடி

பொருளாதாரத்தை மோசமான நிலையில் விட்டது முந்தைய ஆட்சி - பிரதமர் கடும் விமரிசனம்
New Delhi:

பொருளாதாரத்தின் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, பலமான பதிலடி தந்திருக்கிறார் பிரதமர் மோடி. “இந்திய பொருளாதாரத்தை மிக மோசமான நிலையில், பொருளாதார அறிஞரான பிரதமரும் அனைத்தும் தெரிந்த நிதி அமைச்சரும் விட்டுச் சென்றனர். அந்த நிலையிலிருந்து மீட்டுள்ளது எங்கள் அரசு” என்று கடுமையாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும், நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் பற்றி கடுமையாக பேசியுள்ளார்.

இந்தியா இப்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உள்ளது. அடிப்படை வலுவாக உள்ளதால் வேகமான முன்னேற்றம் கிடைத்துள்ளது என்றார். வேலை வாய்ப்புகள் இல்லாத வளர்ச்சி எப்படி ஏற்புடையதாகும் என்ற விமர்சனத்தை மறுத்து பேசிய அவர், “ ஒவ்வொரு மாநிலமும் நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அப்படியானால் மத்திய அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்று எப்படி சொல்ல முடியும்” என்றார்.

வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளை 2014-ம் ஆண்டே கண்டுபிடித்து, கடன் வழங்குவதில் அரசியல் தலையீடு இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின், நிறுவனங்கள் கைப்பற்ற அரசு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஸ்வராஜ்யா என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் “ பி.ஜே.பி அரசு பதவி ஏற்றபோது, பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட தகவல்கள் உண்மை தானா என்ற சந்தேகம் கூட இருந்தது” என்றார்.

நாங்கள் இந்திய நலனுக்காகவே முன்னுரிமை அளித்தோம். அரசியல் பழி தீர்க்க நினைத்திருந்தால் பொருளாதாரத்தின் மீதான வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருப்போம். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை.

“பிரச்சனைகளை மறைத்து வைக்க பார்க்கவில்லை. மாறாக, பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகளை கண்டுபிடிப்தில் நாங்கள் கவனம் செலுத்தினோம்” என்று கூறினார்.

“பிரச்சனைகளை சரி செய்ய முதல் நாளில் இருந்தே ஓடத் தொடங்கினோம். இதனால் பல விமர்சனங்களை நாங்கள் சந்தித்தோம். இந்திய பொருளாதாரத்தின் அடிப்படையை நிலையாக்கி, நீண்ட கால பலனை பெரும் வகையில் நாங்கள் நடவடிக்கைகள் எடுத்தோம். அந்நிய முதலீடுகள் இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி வரி முறை புதிய மாற்றஙகளை செய்துள்ளது. தொழில் தொடங்க எளிதான நாடாக இந்தியா மாறியுள்ளது” என்றும் அவர் கூறினார்.

மேலும் வேலை இல்லா திண்டாட்டம் பற்றிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர் “ வேலை வாய்ப்புகள் பற்றிய, துல்லியமான கணக்கெடுப்பு முறை நம்மிடம் இல்லை. அதனால் எதிர்கட்சிகள் குறை கூறுவதை, நாங்கள் குறை கூற விரும்பவில்லை” என்றார்.
புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது பற்றி டேட்டாவை பற்றி பேசிய அவர் “ கிராமங்களில் 3 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 15,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், 48 லட்சம் புதிய வணிக நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பி.எஃப் பதிவேட்டின் படி புதிதாக 41 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், விவசாயம் பற்றி பேசிய பிரதமர், தங்கள் அரசு விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக்கவும், முதலீட்டுக்கான பொருள் செலவை குறைக்கவும், விளை பொருட்களுக்கு சரியான விலை ஆகியவற்றை உறுதி செய்ய திட்டங்கள் வகுத்து வருவதாக தெரிவித்தார். கடந்த ஆட்சியில் விவசாயத்துக்கு 1.12 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. எங்கள் அரசு 5 ஆண்டு காலத்துக்கு 2..12 லட்சம் கோடி நிதி ஒத்துக்கியிருக்கிறோம் என்றார். அது மட்டும் அல்ல, பயிர் காப்பீடு, குறைந்தபட்ச ஆதார விலை, மண் ஆரோக்கிய நிலை அட்டை போன்றவையும் விவசாயத்துக்கு தங்கள் அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டஙக்ள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

.