This Article is From Jun 18, 2019

தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகள் மூடல்? செங்கோட்டையன் விளக்கம்

பள்ளி பாடதிட்டங்களை மாற்றுவது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகள் மூடல்? செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவு, இந்த ஆண்டு கடும் தண்ணீர் தட்டுபாடு ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தண்ணீர் பஞ்சம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கிய செம்பரம்பாக்கம், வீராணம், புழல் உள்ளிட்ட ஏரிகள் பருவமழை பொய்த்து போனதால் முற்றிலும் வறண்டு விட்டன. இதனால் தண்ணீருக்காக சென்னைவாசிகள் அல்லாடி நிற்கின்றனர்.

இதேபோல், பள்ளிகளிலும் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலியாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் பிரச்சினையால் பள்ளிகள் மூடப்படவில்லை. பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இந்த ஆண்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு 5 பாடங்களாக குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் தவறானது. 5 பாடங்கள் கொண்டு வருவது பற்றி முதல்வரிடம் ஆலோசித்த பின்னர், மக்களிடம் கருத்து கேட்ட பின்னர் தான் முடிவு செய்யப்படும். பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும். பள்ளியில் தமிழ், ஆங்கில மொழிப்படங்கள் உட்பட 6 பாடங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு புதிதாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் இன்று அல்லது நாளை மாலைக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். இன்னும் 2 நாட்களுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்.

உரிமம் இல்லாத பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என்றும் பள்ளிகளுக்கு தடையின்றி பாடபுத்தகங்கள் அனுப்பப்ட்டு வருதாகவும், குறைபாடுகள் இருந்தால் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

.