அலைய வேண்டாம் : டெல்லியில் டிரைவிங் லைசென்ஸ் உள்பட 40 அரசு சேவைகள் வீடு தேடி வருகிறது

இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே தொடங்க வேண்டிய டோர் டெலிவரி சர்வீஸ் கவர்னரின் நடவடிக்கையால் தாமதம் ஆனதாக டெல்லி அரசு புகார் கூறியுள்ளது

அலைய வேண்டாம் : டெல்லியில் டிரைவிங் லைசென்ஸ் உள்பட 40 அரசு சேவைகள் வீடு தேடி வருகிறது

வீட்டிற்கே வந்து அளிக்கும் அரசு சேவைகளால் இடைத் தரகர் முறை ஒழியும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

New Delhi:

புதுடெல்லி: டெல்லியில் திருமணச் சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அரசின் 40 சேவைகள் இன்று (திங்கள்) முதல் தொடங்கப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின்படி டெல்லி மக்கள் அரசின் சேவைகளைப் பெறுவதற்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று அரசு கூறியுள்ளது. டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய திட்டத்தின்படி சாதிச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்படும். இதற்காக 50 ரூபாய் மட்டும் கூடுதல் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஏஜென்சி மூலமாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக கால் சென்டர்கள் டெல்லியில் நிறுவப்படவுள்ளது. ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், திருமண பதிவு, டூப்ளிகேட் ஆர்.சி., முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவையும் டெல்லி அரசின் டோர் டெலிவரி சர்வீஸில் இடம் பெற்றுள்ளது.

ஒருவருக்கு அரசு சான்றிதழ் வேண்டுமென்றால் அவர் கால் சென்டருக்கு போன் செய்தால் போதும். அதன் பின்னர் அங்கிருந்து நேராக விண்ணப்பதாரரின் வீட்டிற்கு வரும் ஊழியர்கள், சான்றிதழுக்கு தேவையான ஆவணங்களை பெற்றுச் செல்வார்கள். அந்த ஊழியர்களிடம் பயோமெட்ரிக் டிவைஸ், கேமரா உள்ளிட்டவை இருக்கும்.

டிரைவிங் லைசென்ஸ் எனில் விண்ணப்பதாரர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சென்று டிரைவிங் டெஸ்டில் கிளியர் செய்ய வேண்டும்.

இந்த திட்டம்குறித்து கடந்த மாதம் ட்விட்டரில் பதிவிட்ட கெஜ்ரிவால், “டோர் டெலிவரி சர்வீஸ் என்பது அரசு நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரட்சி. ஊழல் மீது விழும் பெரும் இடி. இந்த திட்டம் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். உலகிலேயே முதன்முறையாக டெல்லியில்தான் இதுபோன்ற சேவை அளிக்கப்படவுள்ளது என்று கூறியிருந்தார்.