''கவலைப்படாதீங்க... இதுவும் கடந்து போகும்'' - வைரலாகும் ரஜினி வீடியோ

வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

''கவலைப்படாதீங்க... இதுவும் கடந்து போகும்'' - வைரலாகும் ரஜினி வீடியோ

கொரோனா வைரஸ் பாதிப்பால் ரஜினி நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • வீடியோ வாயிலாக வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ரஜினிகாந்த் கோரிக்கை
  • அந்தந்த நாட்டு அரசின் கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வலியுறுத்தல்
  • கொரோனா பாதிப்பு காலமும் கடந்து போகுமென ரஜினிகாந்த் ஊக்கப்படுத்தியுள்ளார்

கொரோனா தடுப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

ரஜினி தற்போது தனது 168-வது திரைப்படமான ‘அண்ணாத்த' திரைப்படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘சிறுத்தை' சிவா இயக்கும் இப்படம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், நோய் பரவுவது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையில், ரஜினியின் அடுத்த படமான 'தலைவர் 169', திறமை வாய்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கலாம் என்றும் பேசப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ரஜினி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு ஒரு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். கொரோனா வைரசால் முழு உலகமே பாதிப்பு அடைஞ்சிருக்கு... இதுக்கு இந்தியாவும், தமிழ்நாடும் விதி விலக்கல்ல. உங்களைப் பிரிந்து வாழும் உங்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எப்போதும் உங்களைப் பற்றித்தான் சிந்தனை உள்ளது.

நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ அந்த நாடு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடித்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதுதான் நீங்கள் உங்கள் உறவினர்களுக்கும், குடும்பத்தாருக்கும் நீங்க கொடுக்குற இந்த ஆண்டின் மிகப்பெரிய பரிசு. நலமுடன் வாழுங்க. கவலைப்படாதீங்க... இதுவும் கடந்து போகும். 

இவ்வாறு ரஜினிகாந்த் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.