This Article is From Feb 25, 2020

'மக்களுக்கு மத சுதந்திரம் இருக்க வேண்டும் என மோடி விரும்புகிறார்' : அமெரிக்க அதிபர் டிரம்ப்

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இது இந்திய விவகாரம் என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளார் டிரம்ப்
  • சி.ஏ.ஏ.என்பது இந்திய விவகாரம் என்று டிரம்ப் கூறியுள்ளார்
  • சி.ஏ.ஏ. விவகாரத்தை டிரம்ப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை
New Delhi:

மக்களுக்கு மத சுதந்திரம் இருக்க வேண்டுமென பிரதமர் மோடி விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக நடந்த வன்முறையில் 9 பேர் உயிரிழந்திருக்கும்  சூழலில் டிரம்ப் இவ்வாறான கருத்தை கூறியுள்ளார். 

டெல்லியில் நடந்த வன்முறை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அது இந்திய விவகாரம் என்று டிரம்ப் பதில் அளித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில், 'பிரதமர் மோடியுடன் மத சுதந்திரம் தொடர்பாக பேசினேன். மக்களுக்கு மத சுதந்திரம் இருக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார். இதனை அடைவதற்காக கடினமாக உழைக்க வேண்டும். தனிநபர் தாக்குதல் தொடர்பாக நான் சில தகவல்களை கேள்விப்பட்டேன். அது இந்திய விவகாரம்' என்று தெரிவித்துள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், 'நான் அதனைப்பற்றி ஆலோசிக்க விரும்பவில்லை. அந்த விவகாரத்தை நான் இந்தியாவிடமே விட்டு விடுகிறேன். இந்திய மக்களுக்காக மத்திய அரசு சரியான முடிவை எடுக்கும் என நம்புகிறேன்' என்றார். 

டெல்லியில் நேற்று மாலை முதற்கொண்டு நடந்த வன்முறையில் போலீஸ் ஒருவர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். டெல்லிக்கு டிரம்ப் வந்த சில மணி நேரங்களில் இந்த வன்முறை வெடித்திருக்கிறது. 

.