This Article is From May 24, 2019

தேசிய அளவில் 3வது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள திமுக! - முழு தகவல்..

திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் இந்த வெற்றியின் மூலம் தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

தேசிய அளவில் 3வது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள திமுக! - முழு தகவல்..


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் இந்த வெற்றியின் மூலம் தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. 

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தொடக்கம் முதலே பெரும் முன்னிலையில் இருந்து வந்த, பாஜக தொடர்ந்து 350 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2014ல் பாஜக பெற்ற வெற்றியை காட்டிலும் இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக பெறும் வெற்றி பெற்று உள்ளது. 

ஆனால், காங்கிரஸ் கட்சியோ 90 தொகுதிகளை பெறவே கடும் போட்டியை எதிர்கொண்டு, நீண்ட இழுபறிக்கு பின்னர், அதுவும் குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசத்திலே 90 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலின் சொந்த தொகுதியான அமேதியிலும் எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம், ராகுல் கடும் தோல்வியை சந்தித்தார்.

எனினும், முன்னெச்சரிக்கையாக கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் போட்டியிட்டதால், அங்கு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளன. 

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் கடும் தோல்வியை சந்தித்தது. 

தமிழகத்தில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அவரவர் தனி சின்னத்திலும், மதிமுக, ஐ.ஜே.கே, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் திமுகாவின் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. 

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதியில் திமுகவின் சொந்த சின்னமான உதய சூரியன் சின்னத்தில் 23 தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மூலம் திமுக தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

தேசிய அளவில் 303 இடங்களில் தாமரை சின்னத்தில் வெற்றி பெற்று பாஜக முதலிடத்தையும், 52 இடங்களில் கை சின்னத்தில் வெற்றி பெற்று காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும், 23 இடங்களில் உதய சூரியன் சின்னத்தில் வெற்றி பெற்று திமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 

மேலும் அடுத்தப் படியாக 22 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளது. 


 

.