This Article is From Sep 05, 2019

DMK: திமுக சார்பில் முதல்வர் எடப்பாடிக்கு பாராட்டு விழா நடத்த தயார்! - மு.க.ஸ்டாலின்

2.5 லட்சம் கோடிக்கும் மேலாக முதலீடுகளை முதல்வர் பெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. முதல்வர் கூறிய மொத்த முதலீடும் தமிழகத்திற்கு வந்து விட்டால் திமுக சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

DMK: திமுக சார்பில் முதல்வர் எடப்பாடிக்கு பாராட்டு விழா நடத்த தயார்! - மு.க.ஸ்டாலின்

திமுக சார்பில் முதல்வர் எடப்பாடிக்கு பாராட்டு விழா நடத்த தயார்! - மு.க.ஸ்டாலின்

அமெரிக்காவில் அறிவித்த முதலீடுகள் அனைத்தும் தமிழகத்திற்கு வந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுகவே பாராட்டு விழா நடத்தும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் குடும்ப திருமணவிழா திருப்பூரில் இன்று நடந்தது. இந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், பாஜக தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், “கலைஞருக்கு பிறகு கட்சியின் தலைமையை ஏற்ற தளபதி அவர்கள், எங்களையெல்லாம் தோற்கடித்து இன்று வெற்றி தளபதியாக உள்ளார். நாங்கள் இன்னும் உழைக்க வேண்டியதும், அதனை தளபதி அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகமுள்ளது” என்று அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 1967-ம் ஆண்டு திமுக அரியணை ஏறிய பிறகு தான் சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது. பொறுத்தார் பூமி ஆள்வார். நாம் இப்போது பொறுத்து கொண்டிருக்கிறோம். 

அனைவரும் திமுக குடும்ப கட்சி என சொல்கிறார்கள். நானும் இப்போது அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். திமுக ஒரு குடும்ப கட்சிதான். குடும்ப பாச உணர்வோடு அனைவரும் உள்ளோம் என்பதால் தான் கருணாநிதி அன்பு உடன் பிறப்புகளே என அழைத்ததைச் சுட்டிக்காட்டினார். 

சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும் போது நாங்கள் அவர்களை வீழ்த்தி விட்டோம் என்றார். நான் கூறுகிறேன், உங்களை வீழ்த்தவில்லை, தோற்கடித்து உள்ளோம். அதுவும் நாங்கள் தோற்கடிக்கவில்லை, மக்கள் தான் தோற்கடித்து உள்ளார்கள்.

பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனை மேலும் சரி செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சரோடு பெரும்பாலான அமைச்சர்களும் வெளிநாடு சென்றுள்ளனர். இது அதிமுகவின் சுற்றுலாதுறை அமைச்சரவை போல உள்ளது.

2.5 லட்சம் கோடிக்கும் மேலாக முதலீடுகளை முதல்வர் பெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. முதல்வர் கூறிய மொத்த முதலீடும் தமிழகத்திற்கு வந்து விட்டால் திமுக சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயார் என்று அவர் கூறியுள்ளார்.
 

.