This Article is From Apr 30, 2019

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சட்டசபை செயலரிடம் திமுக மனு!!

தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி ஆகியோருக்கு எதிராக அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்துள்ளார்.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சட்டசபை செயலரிடம் திமுக மனு!!

சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி சட்டசபை செயலர் சீனிவாசனிடம் திமுக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி ஆகியோருக்கு எதிராக அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்துள்ளார். 

இதனை பரிசீலித்த சபாநாயகர் தனபால், இந்த புகார் குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரி சம்பந்தப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. 

இந்த நிலையில் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சட்டசபை செயலர் சீனிவாசனிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று மனு அளித்தார். 

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆர்.எஸ். பாரதி, சபாநாயகர் தனபால் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும், ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்கள் மீது அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.