‘பணத்துக்கு மதிப்பெண்’ சர்ச்சையில் அண்ணா பல்கலை.,- விசாரணை கோரும் ஸ்டாலின்!

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நடைபெறும் வித விதமான முறைகேடுகளும் அ.தி.மு.க ஆட்சியில் உயர்கல்வித்துறை எப்படி சீரழிந்து விட்டது என்பதை உணர்த்துகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘பணத்துக்கு மதிப்பெண்’ சர்ச்சையில் அண்ணா பல்கலை.,- விசாரணை கோரும் ஸ்டாலின்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இது தொடர்பாக கடந்த 2 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மற்றும் 10 பேராசிரியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அவர்களில் பலர் இடைக்கால பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் கொதி கொதித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதிப்பெண் மோசடி தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி. உமா உள்ளிட்ட மூன்று பேரை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது “மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதில் புரையோடிப் போயிருக்கின்ற ஊழல்” நோயை அடையாளம் காட்டியிருக்கிறது.

அது மட்டுமின்றி பத்து பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதும், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நடைபெறும் வித விதமான முறைகேடுகளும் அ.தி.மு.க ஆட்சியில் உயர்கல்வித்துறை எப்படி சீரழிந்து விட்டது என்பதை உணர்த்துகிறது.

கடந்த ஆண்டு 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்காக விண்ணப்பித்து உள்ளனர் என்றும் அவர்களில் 73 ஆயிரத்து 733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் வெளிவந்துள்ள செய்திகள் பல்கலைக்கழகத்தின் நியாயமாக தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கமாக விண்ணப்பிக்கும் “மறு மதீப்பீட்டின்” மீது மிகப்பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, தேர்வில் தோல்வியடைந்தவர்கள் இந்த தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டின் மூலம் வெற்றி பெற்றுள்ளனர் என்பது அதைவிட கொடுமையான செய்தியாக இருக்கிறது.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு “மறு மதிப்பீட்டு”க்கு விண்ணப்பிப்பது அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உள்ள வழக்கமான நடைமுறைதான் என்றாலும், அந்த மறு மதிப்பீட்டு முறையில் ஒரு விடைத்தாளுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிக மதிப்பெண்கள் போட்டிருப்பதும், ஒரு விடைத்தாளுக்கு 70 மதிப்பெண்கள் வரை மறு மதிப்பீட்டில் அளித்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும், விடைத்தாள் அச்சடிப்பதில் 60 கோடி ரூபாய் ஊழல் என்றும் வரும் செய்திகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒட்டு மொத்த தேர்வு முறையின் மீதான நம்பகத்தன்மைக்கு குந்தகம் விளைவித்திருக்கிறது.

ஆகவே, உலக அளவில் தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பை போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உயர்கல்வித்துறைக்கு இருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணை அதிகாரியாக ஒரு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியை நியமித்து, ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தின் மறு மதீப்பீட்டு முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் சீர்திருத்தங்களை பரிந்துரை செய்வதற்கு “துணை வேந்தர்கள் அடங்கிய குழு” ஒன்றினை அமைத்து மாணவர்களின் எதிர்காலத்தையும், உயர்கல்வியின் தரத்தையும் பாதுகாத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் தமிழக அரசு, ‘இந்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................