This Article is From Sep 26, 2018

போர் குற்றங்களுக்காக திமுக, காங்கிரஸ் மீது விசாரணை வேண்டும்: முதல்வர் பாய்ச்சல்

2009 ஆம் ஆண்டு நடந்த ஈழப் போரில், இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவி செய்துள்ளது தெரிய வந்துள்ளது

போர் குற்றங்களுக்காக திமுக, காங்கிரஸ் மீது விசாரணை வேண்டும்: முதல்வர் பாய்ச்சல்

2009 ஆம் ஆண்டு நடந்த ஈழப் போரில், இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்போது ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக மீது சர்வதேச நீதிமன்றம், போர் குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த 2009 ஆம் ஆண்டு, இலங்கையில் நடந்த போரின் போது இந்திய அரசு, இலங்கை அரசுக்கு உதவி செய்தது என்று அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தது. அதில் திமுக முக்கிய பங்கு வகித்தது. இந்தக் காரணத்தினால் தான், திமுக மற்றும் காங்கிரஸ் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக, இந்த விவகாரம் குறித்து கவனம் ஈர்க்க கூட்டம் ஒன்றை சேலத்தில் நடத்தியது. கூட்டத்தில் திமுக-வையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி.

அவர் பேசுகையில், ‘2009 ஆம் ஆண்டு ஈழத்தில் போர் நடந்த போது இந்திய அரசு, தமிழர்களை கொன்று குவிக்க துணை போயுள்ளது. அப்போது திமுக-வும் காங்கிரஸும் தான் ஆட்சி பொறுப்பில் இருந்தன. தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் மீது போர் குற்ற விசாரணையை சர்வதேச நீதிமன்றம் மூலம் நடத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

அவர் மேலும், ‘திமுக-வில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது. அது ஒரு அரசியல் கட்சி அல்ல. திமுக ஒரு நிறுவனம். ஆனால் அதிமுக-விலோ அடிப்படை உறுப்பினர் கூட பெரும் பதவியைப் பெறலாம். மு.க.ஸ்டாலின் மக்கள் பிரதிநிதியாகவும் கட்சியின் தலைவராகவும் ஆவதற்கு கருணாநிதிதான் காரணம். அவர் கொள்ளைப் புற வழியாக பதவிக்கு வந்தவர்’ என்று சரமாரியாக ஸ்டாலினை விமர்சித்துப் பேசியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.