This Article is From Aug 28, 2019

CM's foreign trip: முதலீடுகளை ஈர்க்க எடப்பாடி என்ன திட்டம் வைத்திருக்கிறார்? கே.எஸ்.அழகிரி

புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு பதில் இருக்கிற முதலீட்டாளர்களுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர அரசு முன்வந்தாலே போதும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும்

CM's foreign trip: முதலீடுகளை ஈர்க்க எடப்பாடி என்ன திட்டம் வைத்திருக்கிறார்? கே.எஸ்.அழகிரி

முறையாக திட்டமிடுதல் இல்லாத முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றியை தராது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். முதல்வரின் சுற்றுப் பயணம் இன்று காலை தொடங்கியது. 3 நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் வரும் 10-ம்தேதி தமிழகம் திரும்புகிறார். 

இதுகுறித்து சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வெளிநாட்டு பயணம் செல்லும் போது பொறுப்புகளை வேறு ஒருத்தரிடம் ஒப்படைத்து செல்லும் மரபை எடப்பாடி பழனிசாமி மீறியுள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக முதலமைச்சர் அதற்காக என்ன திட்டங்களை வைத்திருக்கிறார்? .

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கு வசதிகளை செய்து தர அரசு முன் வராததால் அவர்கள் இரண்டாவது ஆலைகளை நிறுவ மறுத்துள்ளனர். இதனால், தமிழகத்திற்கு வர வேண்டிய பல தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கு கைமாறியது. 

புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு பதில் இருக்கிற முதலீட்டாளர்களுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர அரசு முன்வந்தாலே போதும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொழிலதிபர்களைச் சந்தித்து தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி 14 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடு சென்றிருக்கிறார்.

இதற்கு முன்பு, வெற்று விளம்பரச் செலவுகள் செய்து நடத்தப்பட்ட முதல் இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரப் போவதாகச் சொன்ன 5.42 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா? இல்லவே இல்லை!

இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன்பு அமைச்சர்கள் வெளிநாடு சென்றபோது, செல்லாத முதலமைச்சர், அந்த மாநாடு முடிந்து ஏழு மாதங்கள் கழித்து வெளிநாடு போவது ஏன்?

வெளிப்படையாக நான் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் முதலமைச்சர், தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை - உண்மையான காரணங்களை தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
 

.