This Article is From Mar 04, 2020

வெறுப்பைத் தூண்டிய பேச்சு தொடர்பாக வெள்ளியன்று விசாரணை நடத்துகிறது டெல்லி உயர் நீதிமன்றம்!

டெல்லியில் 4 நாட்கள் நடந்த வன்முறையில் 48 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் அதிகமானோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்
  • 4 வாரங்களுக்கு உயர் நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்திருந்தது
  • உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் வாதத்தை மத்திய அரசு ஏற்கவில்லை
New Delhi:

டெல்லியில் வன்முறை ஏற்பட்டதற்குக் காரணமாகக் கூறப்படும் வெறுப்பைத் தூண்டிய பேச்சுகள் மீதான புகார் குறித்து, வெள்ளியன்று உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, 'வெறுப்பைத் தூண்டிய பேச்சுகள் மீதான வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியிடம் வெள்ளியன்று விசாரணைக்கு வருகிறது. இது சம்பந்தமான அனைத்து வழக்குகளும் வெள்ளிக் கிழமை விசாரிக்கப்படும். இதனை விரைந்து முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளது. 

டெல்லியில் 4 நாட்கள் நடந்த வன்முறையில் 48 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் அதிகமானோருக்குக் காயம் ஏற்பட்டது. 

இந்த வன்முறைக்கு பாஜக தலைவர்கள் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதுதான் முக்கிய காரணம் என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக பாஜக தலைவர்கள் மீத நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

கடந்த வாரம் இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் தலைவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டது. 

4 வாரங்கள் என்பது மிகுந்த காலதாமதம் எனக் கருதிய மனுதாரர்கள் விரைந்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு விசாரணையில்தான் வெள்ளிக் கிழமை விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

4 வாரங்களுக்கு வழக்கை உயர் நீதிமன்றம் ஒத்தி வைப்பது என்பதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். 

உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, வெறுப்பு பேச்சுக்களால்தான் வன்முறை ஏற்பட்டது என்ற மனுதாரர்களின் வாதத்தை மத்திய அரசு ஏற்கவில்லை. அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, 'ஒன்று, மூன்று வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கள் வன்முறை நடந்த இடத்தில் பேசப்பட்டிருக்கலாம். ஆனால் அவைதான் வன்முறைக்கே காரணம் என்பதை ஏற்க முடியாது' என்றார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, 'டெல்லியில் அமைதி உடனடியாக திரும்ப வேண்டும். மத்தியஸ்தனம் செய்வதற்கு நாங்கள் உத்தரவிடவில்லை. டெல்லி உயர் நீதிமன்றத்தால் இந்த விவகாரத்திற்கு அமைதியான முறையில் தீர்வு ஏற்படுத்த முடியும்' என்றது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெறுப்பைத் தூண்டிய பேச்சு தொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதனை விசாரித்தவரும், உடனடி நடவடிக்கை தேவை என உத்தரவிட்டவருமான நீதிபதி எஸ். முரளிதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக வழக்கு ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

முன்னதாக எஸ். முரளிதர் தலைமையிலான அமர்வு, 'வெறுப்பைத் தூண்டிய பேச்சுக்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதை போலீஸ் தாமதப்படுத்தக்கூடாது. ஏற்பட்ட விளைவுகளைக் கவனத்தில் கொண்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 1984-ல் ஏற்பட்டதைப் போன்று மீண்டும் கலவரம் ஏற்பட அனுமதிக்க முடியாது' என்று தெரிவித்தது. 

.