ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க மத்திய அரசிடம் 5,000 கோடி நிதி கோரும் டெல்லி அரசு!

தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக போராடக்கூடிய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் இதர செலவுகளுக்கும் ரூ 7,000 கோடி பற்றாக்குறை நிலவுகிறது.

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க மத்திய அரசிடம் 5,000 கோடி நிதி கோரும் டெல்லி அரசு!
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 1.82 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய தலைநகர் டெல்லியில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லி அரசு தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 5,000 கோடி நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளது. இந்த கோரிக்கையை மேற்குறிப்பிட்டு மத்திய அரசு டெல்லி அரசுக்கு உதவ வேண்டும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ட்விட் செய்துள்ளார்.

மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போல டெல்லிக்கு எவ்வித பொருளாதார பலனும் கிடைக்கவில்லை எனவே, இந்த கோரிக்கை எழுப்பப்படுவதாக டெல்லி நிதியமைச்சர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

மேலும், “ஊழியர்களுக்கான ஊதியத்தினை வழங்கவும், பிற செலவுகளுக்காகவும் டெல்லி அரசுக்கு மாதம் 3,500 கோடி நிதி அவசியமாகிறது. இந்நிலையில் கடந்த இரு மாத காலமாக ஜி.எஸ்.டி வருவாயானது எங்களுக்கு மாதத்திற்கு 500 கோடி என்கிற அளவில்தான் வந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக போராடக்கூடிய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் இதர செலவுகளுக்கும் ரூ 7,000 கோடி பற்றாக்குறை நிலவுகிறது.“ என மனீஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

இது ஒரு புறமிருக்க “டெல்லி  முழுமையாக ஊரடங்கில் இருக்காது.“ என்றும், நான்காம் முறையாக நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்படுவதற்கு முன்கூட்டியே டெல்லி தளர்வுகளை அறிவிக்க விரும்புவதாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார்.

டெல்லியில் ஏறத்தாழ 120க்கும் அதிகமான கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ள நிலையிலும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி டெல்லி அரசு பல தளர்வுகளை அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.