''டெல்லி புகை மண்டலத்துக்கு மத்தியில் உயிர் வாழ முடியுமா?'' - உச்ச நீதிமன்றம் கேள்வி!!

தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு பிரச்னையை தீர்க்க முடியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

''டெல்லி புகை மண்டலத்துக்கு மத்தியில் உயிர் வாழ முடியுமா?'' - உச்ச நீதிமன்றம் கேள்வி!!

நாடு முழுவதும் பேசப்படும் பொருளாக டெல்லி புகை மண்டல பிரச்னை மாறியுள்ளது.

New Delhi:

டெல்லி காற்று மாசு தொடர்பான பிரச்னை, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, 'காற்று மாசால் மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர். இந்த புகை மண்டலத்துக்கு மத்தியில் உயிர் வாழ முடியுமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

குடிப்பதற்கு தண்ணீர் இனி வரும் காலங்களில் கிடைக்குமா என்பது ஒரு விவாதப் பொருளாக இருந்து வரும் நிலையில், இன்றைக்கு சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்காதா என ஏங்கும் நிலைக்கு டெல்லி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக அங்கு நிலவும் புகை மண்டலம், காற்றை கடுமையாக மாசுபடுத்தியுள்ளது.

இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன. நாளை மறுதினம் வரைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்களே சுவாசிப்பதற்கு சிரமப்படும் நிலையில், பிரச்னையை முழுமையாக தீர்ப்பதுதான் பள்ளிக் குழந்தைகளுக்கு செய்யும் நல்ல காரியமாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்புகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி புகை தொடர்பான வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு, 'புகை மண்டலமாக காணப்படும் டெல்லியில் மக்கள் வாழ முடியுமா?. இது உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக எங்களுக்கு தெரியவில்லை. வீட்டில் இருப்பவர்களே காற்று மாசால் பாதுகாப்பாக இல்லை.

பஞ்சாப் மற்றும் அரியானாவில் எரிக்கப்படும் பயிர்க்கழிவுகளே காற்று மாசுக்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆண்டுதோறும் நடக்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த அசாதாரண சூழலுக்கு மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். நிலைமை மோசமாக உள்ளதை இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாது.

மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர். ஒரு நாகரிகமுள்ள சமூகத்தில் இதுபோன்று எதுவும் நடைபெறக் கூடாது.' என்று தெரிவித்தது. 
 

More News