This Article is From Oct 14, 2019

புகார் கொடுக்க வந்தவர் மோடியின் அண்ணன் மகள் என்று தெரியாது: போலீசார் விளக்கம்!

இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், பிரதமர் மோடியின் அண்ணன் மகள், தமயந்தி பெண் மோடி வைத்திருந்த கைப்பையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, தமயந்தி பெண் மோடி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் கொடுக்க வந்தவர் மோடியின் அண்ணன் மகள் என்று தெரியாது: போலீசார் விளக்கம்!

பிரதமர் மோடியின் அண்ணன் மகள் தமயந்தி பென், மோடி டெல்லி போலீசாரின் உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தார்.

New Delhi:


கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடம், இரண்டு வழிப்பறி திருடர்கள் அவரது கைப்பையை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனினும், அவர் தான் பிரதமர் மோடியின் உறவினர் என்பது குறித்த எந்த தகவலையும் காவல் நிலையித்தில் தெரிவிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் மோடியின் அண்ணன் மகள் தமயந்தி பென் மோடி. இவர் அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளார். அப்போது, பழைய டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து புதுடெல்லியின் வடக்கே சிவில் லைன் பகுதிக்கு ஆட்டோவில் சென்ற அவர், இறங்கும்போது அங்கு வந்த 2 பேர் அவரது கைப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பினர். 

அவரது கைப்பையில் ரூ.56 ஆயிரம் ரொக்கம், 2 மொபைல் போன்கள் மற்றும் சில ஆவணங்கள் இருந்துள்ளன. 

இந்தச் சம்பவம் குறித்து போலீசில் தமயந்தி பென் மோடி புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர். 

இதைத்தொடர்ந்து,  திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடியின் மகள் தமயந்தி பென் மோடி, டெல்லி போலீசாரின் உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக துணை ஆணையர் மோனிகா பரத்வாஜ் கூறும்போது, திருட்டு சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வந்த தமயந்தி பென், தான் விஐபி குடும்பத்தை சார்ந்தவர் என்று எந்த தகவலும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. அவர் சாதாரணமாக புகார் அளித்தார். நாங்களும், வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை பிடித்துள்ளோம் என்று அவர் கூறினார். 
 

.