
Delhi Election Result 2020: இந்த முறை டெல்லி தேர்தலில் காங்கிரஸ் வாங்கிய வாக்கு சதவீதம், வெறும் 4.26 விகிதம்தான்.
ஹைலைட்ஸ்
- ஆம் ஆத்மியின் வெற்றி காங்கிரஸுக்குள்ளேயே கருத்து மோதலை உருவாக்கியுள்ளது
- ப.சிதம்பரம், ஆம் ஆத்மியைப் பாராட்டி ட்வீட்டினார்
- இதனால் கட்சியின் மூத்த நிர்வாகி கொதிப்படைந்துள்ளார்
Delhi Election Result 2020: டெல்லி சட்டமன்றத் தேர்திலில் மாபெரும் வெற்றியைப் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அரியணையில் ஏறுகிறது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி. அதே நேரத்தில் டெல்லி தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ், ஒரு இடத்தில் கூட ஜெயிக்காமல் மண்ணைக் கவ்வியது. இதைத் தொடர்ந்து காங்கிரஸின் தோல்வியைப் பெரிதுபடுத்தாமல், ஆம் ஆத்மியின் வெற்றியைப் பாராட்டியுள்ளார் அக்கட்சியின் மூத்த நிர்வாகி ப.சிதம்பரம். இதை காங்கிரஸைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரே விமர்சித்துள்ளார். இது அக்கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் மொத்தம் இருக்கும் 70 தொகுதிகளில் 62 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது ஆம் ஆத்மி. அதே நேரத்தில் மீதம் இருந்த 8 தொகுதிகள் பாஜக வசம் சென்றன. 1998 முதல் 2013 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை டெல்லியை ஆட்சி செய்த காங்கிரஸால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. 63 தொகுதிகளில் காங்கிரஸ், தனது டெபாசிட்டை இழந்தது. ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பின்னரும் இதுவே காங்கிரஸின் நிலையாக இருக்கிறது.
டெல்லி தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. போலித்தனமும் ஏமாற்று வேலையும் தோற்றது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் டெல்லியில் சென்று குடியேறிய மக்கள் பாஜகவின் பிரிவினைப் பிரசாரத்தை ஏற்கவில்லை. இப்படி ஒரு உதாரணத்தை, அடுத்து வரும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தேர்தலை சந்திக்க உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்வைத்துள்ள டெல்லி மக்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்,” என்று ஏகபோகத்துக்கு ஆம் ஆத்மியைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார்.
இதனால் கொதிப்படைந்த காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஷர்மிஸ்தா முகர்ஜி, “மிகுந்த மரியாதையுடன் கேட்கிறேன் சார். பாஜகவை வீழ்த்தும் பணியை காங்கிரஸ், மாநிலக் கட்சிகளிடம் கொடுத்துவிட்டதா? அப்படி இல்லை என்றால், பின்னர் ஏன் ஆம் ஆத்மியின் வெற்றியில் களிப்படைய வேண்டும். நம் தோல்வியைப் பற்றியல்லவா கவலைப்பட வேண்டும்? என் கேள்விக்கு பதில் ஆம் என்றால், நாம் கடையை மூடிவிட்டு நடையைக் கட்ட வேண்டியதுதான்,” என்று கறாராக பதிலடி ட்வீட் பதிவிட்டிருந்தார்.
With due respect sir, just want to know- has @INCIndia outsourced the task of defeating BJP to state parties? If not, then why r we gloating over AAP victory rather than being concerned abt our drubbing? And if 'yes', then we (PCCs) might as well close shop! https://t.co/Zw3KJIfsRx
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) February 11, 2020
முகர்ஜி மட்டும் இப்படியொரு கருத்தைக் கொண்டிருக்கவில்லை. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கியப் புள்ளியான குஷ்புவும், “டெல்லியில் காங்கிரஸுக்கு மேஜிக் நடந்துவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. மீண்டும் காங்கிரஸுக்கு சுழியம். நாம் போதுமான வேலை செய்கிறோமா? நாம் சரியானவற்றைச் செய்கிறோமா? நாம் சரியான பாதையில் இருக்கிறோமா? இல்லை என்பதுதான் பதில். நாம் இப்போது வேலை செய்ய வேண்டும். இப்போது அல்லது எப்போதும் இல்லை. அடிமட்டத்தில், நடுவில் மற்றும் உயர்மட்டத்தில். எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டும்.
அதே நேரத்தில் மோடி - ஷா குண்டர்கள் கூட்டணியை மக்கள் நிராகத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.
அவரின் இந்தப் பதிவுக்கு ஒருவர், “அரசியல் என்பது 24/7 நேரத்துக்கான பணி. உங்கள் கட்சிக்கு மூர்க்கத்தனம் இல்லை, வீரியமான செயல்பாடு இல்லை, தெளிவான பார்வையும் இல்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.
அதற்கு குஷ்பு, “ஒப்புக் கொள்கிறேன்” என்று ரிப்ளை போட்டு அதிரவிட்டுள்ளார்.
இந்த முறை டெல்லி தேர்தலில் காங்கிரஸ் வாங்கிய வாக்கு சதவீதம், வெறும் 4.26 விகிதம்தான். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி, 22.5 சதவிகித வாக்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
2013 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ், 8 இடங்களைக் கைப்பற்றியது. 2015-ல் அது சுழியமாக மாறியது. இப்போதும் சுழியமாகவே நிலை கொண்டிருக்கிறது.
டெல்லி காங்கிரஸுக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல் மற்றும் டெல்லியில் மிகப் பெரும் காங்கிரஸ் தலைவராக இருந்த முன்னாள் மாநில முதல்வர் ஷீலா தீட்சித்தின் மறைவு உள்ளிட்டவை காங்கிரஸை ஆட்டம் காண வைத்துள்ளது.