This Article is From Nov 22, 2019

INX Maxis Case : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை!!

ஐ.என்.எக்ஸ். விவகாரம் தொடர்பாக சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து 2017-ல் அவர் மீது பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

INX Maxis Case : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 2 நாட்கள் விசாரணை!!

நவம்பர் 27-ம்தேதி வரை திகார் சிறையில் இருக்க சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

New Delhi:

திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 தினங்களில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர். இதற்கான அனுமதியை டெல்லி நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்திடம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2.30 முதல் 4 மணி வரையிலும் நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி குமார் குஹார், அமலாக்கத்துறையினருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

முன்னதாக இந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருந்தது. அவரை 27-ம்தேதி வரையில் திகார் சிறையில் அடைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஜாமீன் வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், முதல்கட்ட தகவலின் அடிப்படையில் நடைபெற்ற குற்றத்தில் சிதம்பரத்திற்கு முக்கிய பங்கு இருப்பதாக கருதுவதாக தெரிவித்தது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் 21-ம்தேதி கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சிபிஐ தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் 22-ம்தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதற்கிடையே, அமலாக்கத்துறையினர் தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் கடந்த அக்டோபர் 16-ம்தேதி கைது செய்யப்பட்டார். அவரை நவம்பர் 27-ம்தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக கடந்த 2017 மே 15-ம்தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு ரூ. 305 கோடி அளவுக்கு வெளிநாட்டு முதலீடை சட்ட விரோதமாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுத் தந்தார் என்பது சிபிஐ முன் வைக்கும் குற்றச்சாட்டு.

ஐ.என்.எக்ஸ். விவகாரம் தொடர்பாக சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து 2017-ல் அவர் மீது பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

.