காஷ்மீரில் ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன் டெல்லியை நோக்கிச்சென்ற போலீஸ் உயர் அதிகாரி கைது!

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். எதற்காக போலீஸ் அதிகாரி தீவிரவாதிகளுக்கு உதவி செய்தார் என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு அதிகாரிகள் போலீஸ் உயர் அதிகாரி தாவிந்தர் சிங்கை ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் கைது செய்துள்ளனர்.

Srinagar:

காஷ்மீரில் ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தலைவர் அளிக்கும் வீர தீரத்திற்கான பதக்கத்துடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உடன் 2 தீவிரவாதிகளுடன் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கையில் தாவிந்தர் சிங் என்ற போலீஸ் அதிகாரியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

தாவிந்தர் சிங் என்ற அந்த அதிகரி டி.எஸ்.பி. தரத்தில் இருப்பவர். அவர் பதற்றம் நிறைந்த ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார். சிங்கை, குல்காம் மாவட்டம் வான்போ என்ற இடத்தில் வைத்து ஹிஸ்புல் முஜாகீதீன் தீவிரவாதி நவீது பாபுவுடன் இருக்கையில் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின்போது தெற்கு காஷ்மீரில் தாக்குதல் நடைபெற்றது. இதில் காஷ்மீர் அல்லாத பிற மாநிலத்தவர் 11 பேர் உயிரிழந்தனர். இதில் ஈடுபட்டதாக நவீது பாபு மீது குற்றச்சாட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது சிறப்பு அந்தஸ்து அதிரடியாக நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளி மாநிலத்தவரை குறி வைத்து தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நவீது பாபுவுடைய நடமாட்டத்தை, அவருடைய சகோதரருடைய போனை ட்ரேஸ் செய்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அவர் வந்த வாகனத்தை இடை மறித்தபோது, அவருடன் ஆசிப் என்பவரும், டி.எஸ்.பி. தாவிந்தர் சிங்கும் அந்த வாகனத்திற்கு உள்ளே இருந்துள்ளனர். அவர்களை வான்போ என்ற இடத்தில் வைத்து போலீசார் மடக்கியுள்ளனர்.

தாவிந்தர் சிங் கடந்த ஆகஸ்ட் 15-ம்தேதியன்று வீர தீரத்திற்கான குடியரசு தலைவர் பதக்கத்தை பெற்றிருக்கிறார்.

தாவிந்தரை கைது செய்து விசாரணை நடத்திய பின்னர் போலீசார் ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீரில் அதிரடி சோதனைகள் நடத்தினர். இதில் ஏராளமான வெடி பொருட்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாவிந்தரின் வீடு ஸ்ரீநகரின் பதாமி பாக் கன்டோன்மென்டில் உள்ளது. அங்கு ஏ.கே. 47 துப்பாக்கி மற்றும் 2 கைத்துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர். இன்னொரு கைத்துப்பாக்கி தீவிரவாதி நவீது பாபுவிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

எதற்காக தீவிரவாதிகள் 2 பேர் போலீஸ் உயர் அதிகாரி உதவியுடன் டெல்லியை நோக்கி சென்றார்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்து வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று பணிக்கு வராத தாவிந்தர் சிங் இன்று முதல் 4 நாட்கள் விடுப்பு கேட்டு விண்ணப்பம் அளித்திருக்கிறார்.

முன்னதாக நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி அப்சல் குரு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் 2013-ம் ஆண்டின்போது தாவிந்தர் சிங் தன்னை டெல்லிக்கு அழைத்து வந்து, தங்க வைத்ததாக கூறியிருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

More News