This Article is From May 22, 2020

ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தை வான்வழியாக பார்வையிட்ட பிரதமர் மோடி!

Cyclone Amphan: மேற்கு வங்கப் பயணத்தை முடித்துக் கொண்டு ஒடிசாவுக்குச் சென்று அங்கும் புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட உள்ளார் மோடி. 

Cyclone Amphan: கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவுப் போடப்பட்டதிலிருந்து டெல்லியிலேயே கடந்த 3 மாதங்களாக தங்கியிருந்தார் பிரதமர் மோடி.

ஹைலைட்ஸ்

  • மோடியுடன் மம்தா மற்றும் மேற்கு வங்க ஆளுநர் உடனிருந்தனர்
  • மூவரும் வான்வழியாக புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட்டனர்
  • 3 மாதங்களுக்குப் பின்னர் வெளி மாநிலத்துக்குப் பயணம் செய்துள்ளார் மோடி
New Delhi:

மேற்கு வங்க மாநிலத்தைப் புரட்டிப் போட்ட ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்பை இன்று வான்வழியாக பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. ஆம்பன் புயல் காரணமாக இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடியின் வான்வழிப் பார்வையிடலின் போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் ஆகியோர் உடனிருந்தனர். 

இன்று கொல்கத்தா விமான நிலையத்திற்கு சுமார் 11 மணி அளவில் வருகை தந்தார் மோடி. அப்போது அவரை மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் தன்கர் வரவேற்றனர். 

ஹெலிகாப்ட்டர் மூலம் புயல் பாதித்தப் பகுதிகளை மூவரும் பார்த்தபோது, கொரோனா வைரஸ் பரவலிலிருந்து தற்காத்துக் கொள்ள முக மாஸ்க்குகளையும் அணிந்திருந்தனர். 

கடந்த புதன் கிழமை மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்த ஆம்பன் புயல், மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா உட்பட பல்வேறு இடங்களில் ருத்ர தாண்டவம் ஆடியது. புயல் மிக உக்கிரமாக கரையைக் கடந்ததனால் பல வீடுகள் சேதமடைந்தன, மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்சாரக் கம்பங்கள் தலைகுப்புற விழுந்தன.
 

nk2np5dg

Cyclone Amphan வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவை பெரிதும் பாதித்தது.

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவுப் போடப்பட்டதிலிருந்து டெல்லியிலேயே கடந்த 3 மாதங்களாக தங்கியிருந்தார் பிரதமர் மோடி. இன்றுதான் 3 மாதங்களில் முதன்முறையாக வேறு மாநிலத்துக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.

கடைசியாக அவர் கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி, உத்தர பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டார். 

ஆம்பன் புயல் கரையைக் கடந்த பிறகு, தங்கள் மாநிலத்துக்குப் பிரதமர் மோடி வருகை தந்து, பாதித்த இடங்களைப் பார்வையிட வேண்டும் என்று மாநில முதல்வர் மம்தா கோரிக்கை வைத்திருந்தார். மேலும், அவர் 1 லட்சம் கோடி ரூபாய் நிவாரண நிதியையும் கேட்டுள்ளார். 

ஆம்பன் புயல் கரையைக் கடந்த பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, “ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை வீடியோக்கள் மூலம் பார்த்து வருகிறேன். இதைப் போன்ற மிக இக்கட்டான சமயத்தில் மொத்த தேசமும் மேற்கு வங்கத்துடன் துணை நிற்கும். அம்மாநில மக்களின் நலனிற்காக பிரார்த்தனை செய்கிறேன். இயல்பு நிலையைக் கொண்டு வர பணிகள் நடந்து வருகின்றன,” என ட்வீட்டினார். 

மேற்கு வங்கப் பயணத்தை முடித்துக் கொண்டு ஒடிசாவுக்குச் சென்று அங்கும் புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட உள்ளார் மோடி. 

மேற்கு வங்கத்தைப் போலவே ஒடிசாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ஆம்பன் புயல். மாநிலத்தின் பல்வேறு தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு வசதிகளை ஆம்பன் புரட்டிப் போட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆம்பன் புயலினால் சுமார் 44.8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

.