கூட்டு முயற்சியால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி முன்னுதாரணமாக திகழும் கேரளா!!

கேரளாவில் காசர்கோடு மாவட்டம்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. இங்கு தொழில்நுட்பம் மற்றும் புதிய யுக்திகளை பயன்படுத்தி அரசு கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளது.

கூட்டு முயற்சியால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி முன்னுதாரணமாக திகழும் கேரளா!!

காசர்கோடை 7 மண்டலங்களாக பிரித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • காசர்கோடில் போலீசாரே மளிகைப் பொருட்களை நேரில் சென்று வழங்கினர்
  • 7 மண்டலமாக பிரிக்கப்பட்டு அவை முழுவதும் சீல் வைக்கப்பட்டன
  • கொரோனாவுக்கென தனி மருத்துவமனை காசர்கோட்டில் அமைக்கப்பட்டது
Kasaragod, Kerala:

இந்தியாவின் முதல் கொரோனா பாதிப்பு மாநிலமான கேரளாவில், கொரோனா தற்போது மெல்ல மெல்ல அகன்று வருகிறது. இங்கு தற்போது வரை 47 சதவீதம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இம்மாத இறுதிக்குள் கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கிவிடும் என்று கேரள அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

கேரளாவில் 376 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 166 பேர் காசர்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை பார்க்கலாம்...

கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தவுடன் காசர்கோட் மாவட்டத்தை அதிகாரிகள் 7 மண்டலங்களாக பிரித்து ஊரடங்கு உத்தரவை கடுமையாக்கினர். இங்கு நுழையும் மற்றும் வெளியேறும் செயல்பாடுகள் முற்றிலும் முடக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அத்துடன் வீட்டை விட்டு யாரும் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கைகள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, போலீசாரால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. 

அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்காக 2 வாட்ஸ்ஆப் நம்பர்கள் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை வீடியோ விளம்பரம் மூலம் பிரபல நடிகர் மோகன்லால் பிரபலப்படுத்தினார். 
 


வீட்டுக்கு வீடு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் போலீசாராலேயே விநியோகம் செய்யப்பட்டது. இதனால் அவர்களுக்கு ஊரடங்கை கட்டிக்காப்பது எளிதாக மாறியது. அதேநேரத்தில் ட்ரோன்களும் மாவட்டம் முழுவதும் சுற்றிவந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டது. 

காசர்கோட்டில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 

அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், நேரடி தொடர்பில் இருந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் என 3 ஆயிரம் பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டார்கள். 

இந்த 4 ஆயிரம் பேர் மற்றும் அறிகுறிகளுடன் காணப்பட்ட 14 ஆயிரம் பேர் ஆகியோரின் நடமாட்டம் மொபைல் ஆப்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. 

மருத்துவ உதவிகளும் வாட்ஸ்ஆப்,மொபைல் அழைப்புகள் மூலம் வீட்டிற்கே வந்து வழங்கப்பட்டன. அந்த வகையில் மார்ச் 23-ம் தேதியில் இருந்து 9 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். 

இதுபோன்ற திட்டமிட்ட நடவடிக்கைகளால் காசர்கோட் அதிகாரிகள் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளனர். தற்போது அங்கு பாதிக்கப்பட்ட 166 பேரில் 61 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். டிஸ்சார்ஜ் ஆகுவோர் சதவீதம் தேசிய அளவில் 11.4 - ஆக உள்ளது. அதாவது 100 பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், சுமார் 12 பேர் வீடு திரும்புகின்றனர். இந்த சதவீதம் காசர்கோட் மாவட்டத்தில் 38-ஆக உள்ளது. 

கொரோனாவை கட்டுப்படுத்த இங்கு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் பாதிக்கப்பட்ட அனைவரும் குணம் அடைந்து வீடு திரும்பி விடுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.