This Article is From May 02, 2020

திங்கட்கிழமை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு! விவரத்தை வெளியிட்ட தமிழக அரசு

அழகு நிலையங்கள் மற்றும் சலூன் கடைகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. சமீபத்தில் சலூன் கடைகளால் கொரோனா சிலருக்கு பரவியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த கட்டுப்பாடை அரசு விதித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு! விவரத்தை வெளியிட்ட தமிழக அரசு

திருமண நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும். இறுதி ஊர்வலத்தில் 20 பேருக்கு மேல் செல்ல அனுமதி இல்லை.

கொரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் திங்கட்கிழமை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு தளர்வு Containment Zone எனப்படும் கொரோனா பரவல் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி நோய்கட்டுப்பாடு பகுதி (Containment Zone) இல்லாத இடங்களில், ஹார்டுவேர், கட்டுமான பொருட்கள், சிமென்ட், செல்போன் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

கிராமப்புறங்களில் நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. நகராட்சி, மாநகராட்சிகளில் மால்கள், வணிக வளாகங்களை தவிர்த்து தனியே அமைந்துள்ள கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 

அழகு நிலையங்கள் மற்றும் சலூன் கடைகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. சமீபத்தில் சலூன் கடைகளால் கொரோனா சிலருக்கு பரவியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த கட்டுப்பாடை அரசு விதித்துள்ளது. 

திருமண நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும். இறுதி ஊர்வலத்தில் 20 பேருக்கு மேல் செல்ல அனுமதி இல்லை. 

முன்னதாக மத்திய அரசு மே 4-ம்தேதியில் இருந்து 2 வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. 

இதேபோன்று தமிழகம் முழுவதும் திரையரங்கம், பூங்காக்கள், மதுபானக்கடைகள், கேளிக்கை விடுதிகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மக்கள் கூடுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்கிறது. விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகள் நடைபெற தடை ஏதும் இல்லை.

கட்டுமானப் பணிகள், சுரங்கப்பணிகளுக்கான பொருட்களை வழங்கம் செங்கற்சூளைகள், கல் குவாரிகள், எம் சாண்ட் மணல் கிரசர்கள் இயங்குவற்கும், அது சார்ந்த போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் 33 சதவீதம் பணியாளர்களுடன் தொடர்ந்து இயங்கும். பெரிய தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இயங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் அல்லது மாநகராட்சி ஆணையரிடம் இணையத்தின் வழியே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். பணியாளர்களின் வாகனங்களுக்கும் அனுமதிச் சீட்டு பெறுவது அவசியம். 


 

.