''15 நாட்களில் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வையுங்கள்'' : உச்ச நீதிமன்றம்

பீகாரில் சுமார் 28 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாக நிதிஷ் குமார் அரசு தெரிவித்துள்ளது.  அவர்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று பீகார் அரசு கூறியுள்ளது.  

''15 நாட்களில் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வையுங்கள்'' : உச்ச நீதிமன்றம்

வெளி மாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஹைலைட்ஸ்

  • வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
  • 15 நாட்களுக்கு தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப உத்தரவு
  • தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்த விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவு
New Delhi:

நாட்டில்  பொது முடக்கம் காரணமாக வெளி மாநில தொழிலாளர் பிரச்னை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் தொழிலாளர்களை அவர்களது சொந்த  மாநிலங்களுக்கு  அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, 'வெளி மாநில  தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்காக 4,228 ரயில்கள் ஜூன் 3-ம்தேதி வரை  இயக்கப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில்களில் சுமார் 57 லட்சம் தொழிலாளர்கள் பயணித்து  தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்கள்.  அவர்களை தவிர்த்து சாலை மார்க்கமாக 41 லட்சம் பேர் சென்றுள்ளனர். 

அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு அதிக ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இன்னும் எத்தனை சிறப்பு ரயில்கள்  தேவை என்ற விவரம் பட்டியலிடப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார். 

இதனை விசாரித்த  நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷான் கவுல் மற்றும் ஷா ஆகியோ கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது-

மாநில அரசுகளுக்கு அதிகபட்சமாக 15 நாட்களை அவகாசமாக தருகிறோம். அதற்குள்ளாக வெளி மாநில தொழிலாளர்களை  அவரவர் சொந்த  ஊருக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு எவ்வாறெல்லாம் மாநில அரசுகளால் அளிக்கப்படுகிறது, அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் உள்ளிட்டவை குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். வெளி மாநில தொழிலாளர்களுக்கான பதிவேடு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். 
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

குஜராத்தில் இருந்து 20.50 லட்சம், மகாராஷ்டிராவில் இருந்து 11 லட்சம் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பீகாரில் சுமார் 28 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாக நிதிஷ் குமார் அரசு தெரிவித்துள்ளது.  அவர்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று பீகார் அரசு கூறியுள்ளது.