This Article is From May 08, 2020

அதிகாரத்தை பிரதமர் அலுவலகமே வைத்திருந்தால், கொரோனா போரில் தோல்வி பெறுவோம்: ராகுல்

பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் லாக்டவுனைத் தளர்த்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

அதிகாரத்தை பிரதமர் அலுவலகமே வைத்திருந்தால், கொரோனா போரில் தோல்வி பெறுவோம்: ராகுல்

ஹைலைட்ஸ்

  • பல வலிமையான முதல்வர்கள் இருந்தால் கொரோனாவை வீழ்த்தலாம்
  • ஆரோக்கியத்திற்கும், பொருளாதார நிலைமைக்குமான போட்டியாக கொரோனா உள்ளது.
  • ஏழைகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தற்போது உதவிகள் தேவை.
New Delhi:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே.17ம் தேதி முடிவுக்கு வரும் நிலையில், ஊரடங்கை நீக்கம் செய்வது குறித்து அரசு வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒரு பிரதமருக்கு பதிலாக, பல வலிமையான முதல்வர்கள் இருந்தால் கொரோனாவை வீழ்த்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கொரோனா தடுக்க எடுக்கப்படும்  நடவடிக்கைள் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எடுத்து வருகிறது.

ஆரோக்கியத்திற்கும், பொருளாதார நிலைமைக்குமான போட்டியாக கொரோனா உள்ளது. இது விமர்சிப்பதற்கான நேரமில்லை்; அதே நேரத்தில் பொது முடக்கத்திலிருந்து மீள சரியான உத்தி தேவை. ஏழைகளுக்கும், புலம்பெயர்ந்த  தொழிலாளர்களுக்கும் தற்போது உதவிகள் தேவை.

சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. ஒரு பிரதமருக்கு பதிலாக, பல வலிமையான முதல்வர்கள் இருந்தால் கொரோனாவை வீழ்த்தலாம் என்றும் கூறினார். கொரோனா தடுப்புப் பணியில் மத்திய அரசிடம்  வெளிப்படைத்தன்மை இல்லை, அரசாங்கம் இப்போது செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

மக்கள் மனதில் உளவியல்ரீதியான மாற்றத்தைக் கொண்டுவருவது அவசியம். மத்திய அரசு லாக்டவுனைத் தளர்த்த விரும்பினால், மக்களிடம் தற்போது இருக்கும் அச்சம் நம்பிக்கையாக மாற வேண்டும். இல்லாவிட்டால் லாக்டவுனனைத் தளர்த்தியவுடன் மக்கள் வெளியே வந்துவிடுவார்கள்.

அதிகாரத்தை பிரதமர் அலுவலகமே வைத்திருந்தால், கொரோனா போரில் தோல்வி பெறுவோம். பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் லாக்டவுனைத் தளர்த்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும். மாவட்ட அளவில் ஆட்சியர்களுடன் பேச வேண்டும். ஒரு சக ஊழியரைப் போல் பிரதமர் மோடி பேச வேண்டுமே தவிர, முதலாளி மனப்பான்மையில் பேசக்கூடாது.

லாக்டவுனைத் தளர்த்துவதில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும். எப்போது லாக்டவுன் தளர்த்தப்படுகிறது, என்ன அளவுகோலில் லாக்டவுன் தளர்த்தப்படுகிறது, எந்தத் தொழில்கள் இயங்கும், எதை இயக்க அனுமதிக்கப்படும் என்பது குறித்த திட்டம் வேண்டும். இதை மக்களிடம் வெளிப்படையாகத் தெரிவிப்பது அவசியம். இது மக்களுக்குப் புரிய வேண்டும். 

சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்கள் தேசிய அளவில் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களை மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாநில மட்டங்களில் தீர்மானிக்கப்பட வேண்டும். தேசிய அளவில் சிவப்பு மண்டலங்களாக இருக்கும் பகுதிகள் உண்மையில் பசுமை மண்டலங்கள் மற்றும் நேர்மாறாக இருப்பதாக எங்கள் முதல்வர்கள் தெரிவிப்பதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார். 

.