This Article is From Mar 21, 2020

"இளைஞர்களே.. நீங்கள் இந்த நோயில் இருந்து மாயமாக மறைந்துவிட முடியாது" - உலக சுகாதார அமைப்பு

இந்த நோயால் உங்களை பல வாரங்கள் மருத்துவமனையில் கிடத்த முடியும், முடிந்தால் உங்களை கொள்ளவும் முடியும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்

"இந்த நோய் தொற்று பரவ தொடங்கிய நாளுக்கு பின்னர் முதல் முறையாக புதிய வழக்குகள் எதுவும் வுஹானில் பதிவாகவில்லை என்று தெரிவித்தார்

ஹைலைட்ஸ்

  • நோயின் பிறப்பிடமான வுஹானில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை
  • "நிச்சயம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
  • இளைஞர்களையும் இந்த நோய் விட்டுவைக்காது
Geneva:

உலகமே பரவி வரும் இந்த கொரோனா தொற்று நோயை எதிரித்து போராடி வரும் நிலையில், இந்த நோய் தொடங்கிய இடமான சீனாவில் தற்போது இந்த நோயின் காரணமாக புதிதாக யாரும் பாதிக்கப்படாதது எல்லா நாடுகளுக்கும் சற்று ஆறுதலை தந்துள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத்தொடங்கி தற்போது வரை உலகெங்கிலும் சுமார் 2,50,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு சுமார் 11,000-க்கும் அதிகமானோரை கொன்றுள்ள இந்த நோய் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோயின் பிறப்பிடமான வுஹானில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஜெனீவாவில் காணொலிக்காட்சி மூலம் நடந்த மாநாட்டில் பேசிய உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "இந்த நோய் தொற்று பரவ தொடங்கிய நாளுக்கு பின்னர் முதல் முறையாக புதிய வழக்குகள் எதுவும் வுஹானில் பதிவாகவில்லை என்று தெரிவித்தார். இதன் மூலன் மிக கடுமையான சூழலில் இருந்து கூட மீண்டு வரலாம் என்று பிற நாடுகளுக்கு வுஹான் நிரூபித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  

"நிச்சயம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், ஏன் என்றால் நிலவும் நிலைமை எப்போது வேண்டுமானாலும் தலைகீழாக மாறலாம். ஆனால் இந்த கொரோனா வைரஸை பின்னுக்குத் தள்ளிய நகரங்கள் மற்றும் நாடுகளின் அனுபவம் உலகின் பிற பகுதிகளுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் தருகிறது" என்றார். ஒட்டுமொத்த சீனாவிலும் இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு சில புதிய நோயாளிகளே பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் ஆசியாவிலிருந்து இந்த நோயின் தாக்கம் ஐரோப்பாவிற்கு மாறியுள்ளதால், இப்போது சீனாவை விட ஐரோப்பாவில் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன என்று கூறினார்.

பலவீனமான சுகாதார அமைப்புகள் அல்லது அதிக பாதிப்புக்குள்ளான மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவினால் ஏற்படக்கூடிய தாக்கமே தற்போது WHOவின் மிகப்பெரிய கவலை என்று டெட்ரோஸ் கூறினார். மேலும் "அந்த கவலை இப்போது மிகவும் உண்மையானதாகவும், அவசரமாகவும் மாறிவிட்டது," என்று அவர் கூறினார், ஆனால் அத்தகைய நாடுகளில் குறிப்பிடத்தக்க நோய் பரவல் மற்றும் உயிர் இழப்பு தவிர்க்க முடியாதது அல்ல என்றும், "வரலாற்றில் எந்தவொரு தொற்றுநோயையும் போலல்லாமல், இது செல்லும் வழியை மாற்றும் சக்தி எங்களுக்கு உள்ளது," என்றும் அவர் கூறினார்.
 

வயதானவர்கள் இந்த நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இளைஞர்களையும் இந்த நோய் விட்டுவைக்காது. இன்னும் சொல்லப்போனால் இன்று மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வர இளைஞர்களும் ஒரு காரணம் என்று தெரிவித்தார் டெட்ரோஸ். மேலும் இந்த தொற்று நோய் பரவுவதைத் தோற்கடிப்பதற்கான ஒரு 'சாவி' இரு தலைமுறைகளுக்கு இடையிலான ஒற்றுமை தான் என்று அவர் கூறினார். நான் உலக இளைஞர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், நீங்கள் இந்த நோயில் இருந்து மாயமாக மறைந்து விட முடியாது. இந்த நோயால் உங்களை பல வாரங்கள் மருத்துவமனையில் கிடத்த முடியும், முடிந்தால் உங்களை கொள்ளவும் முடியும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். 

"இளைஞர்களே..! நீங்கள் நோய்வாய்ப்படாவிட்டாலும், நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பது பிறருடைய வாழ்க்கையில் வாழ்வா..? சாவா..? என்ற நிலையை கண்டிப்பாக கொண்டுவரும் என்று கூறினார். அதே சமயம் இந்த இக்கட்டான நிலையில் பல இளைஞர்கள் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை பரப்பி வருவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதே போல இத்தாலியில், மோசமாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ள மூவரில் இருவர் 70 வயதிற்குட்பட்டவர்கள் என்று WHO-வின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் தெரிவித்தார்.

ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் கடந்து செல்வதைத் தவிர்ப்பதற்காக மக்களிடையே உள்ள இடைவெளியை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை விவரிக்க "சமூக தொலைவு" என்பதை விட "உடல் ரீதியான தூரம்" என்ற வார்த்தையை இப்போது பயன்படுத்துவதாகவும் WHO கூறியது. மக்கள் உடல் ரீதியான தனிமைக்கு செல்ல வேண்டியிருக்கலாம் என்றாலும், அவர்கள் தங்களை சமூக ரீதியாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஏன் என்றால் இது போன்ற நெருக்கடியின் சூழலில் போது நல்ல மன ஆரோக்கியத்தை பேணுவது முக்கியம் என்று அவர் கூறினார்.

"ஒரு நெருக்கடியான சூழல் நிலவும்போது மன அழுத்தம், குழப்பம் மற்றும் பயம் ஏற்படுவது இயல்பு. இதுபோன்ற நிலையில் உங்களுக்குத் தெரிந்த மற்றும் நீங்கள் நம்பும் நபர்களுடன் பேசுவது பெரிய அளவில் உதவக்கூடும்." என்று டெட்ரோஸ் கூறினார். இது போன்ற நேரங்களில் சத்தான உணவுகளை உண்பது, உடற்பயிற்சி செய்வது நம்மை இந்த அசாதாரண சூழலில் இருந்து தற்காத்துக்கொள்ள மிகவும் உதவும் என்று அவர் கூறினார். மேலும் புகைபிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்றும் கொரோனா பாதித்தவர்கள் புகை பிடித்தால் அது மேலும் அந்த நோயை தீவிரப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.  

மேலும் இந்த கொரோனா குறித்த செய்தி, தகவல், மற்றும் அறிகுறிகள் பற்றிய விவரங்கள் மற்றும் இந்த வைரஸ் பரவலை தடுப்பது எப்படி என்பது குறித்த ஒரு புதிய சுகாதார எச்சரிக்கை செய்தி சேவையை வாட்ஸ்அப்பில் தொடங்க WHO முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தற்போது வரை ஆங்கிலத்தில் மட்டும் தகவல்கள் பரிமாறப்படும் என்றும், விரைவில் மற்ற மொழிகளிலும் இது அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது. இந்த சேவையை பெற '0041 798 931 892' என்ற எண்ணிற்கு 'Hi' என்ற செய்தியை அனுப்பினால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

.