
காற்றில் பரவும் வைரஸ்கள் என்றால் அவை முழுவதுமாக காற்றில் மிதக்கும் தன்மை கொண்டவை.
கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என சமீபத்தில் வந்த செய்திகளை மக்களை மேலும் பதற்றம் அடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக விஞ்ஞானிகள் சில விளக்கங்களை அளித்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய அறிவியல் தொழில்துறை ஆய்வகத்தின் இயக்குனர் சேகர் மந்தே NDTVக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்றால், அதனால் பாதிக்கப்பட்டவர் தும்மும்போதும் இறுமும் போதும் வைரஸ் காற்றில் சில அடி தூரம் சென்று விழும். காற்றிலேயே இருந்து பரவாது.
காற்றில் பரவும் வைரஸ்கள் என்றால் அவை முழுவதுமாக காற்றில் மிதக்கும் தன்மை கொண்டவை. இதற்கு பெரியம்மை, சின்னம்மை, இன்புளூயன்ஸா உள்ளிட்டவற்றை உதாரணமாக சொல்லலாம்.
ஆனால் கொரோனா வைரஸ் என்பது, பாதிக்கப்பட்டவரிடம் இருந்து வெளிப்படும்போது சில அடி தூரத்திற்கு சென்று விழும். அவற்றிற்கு காற்றிலேயே பரவும் தன்மை கிடையாது. உடனடியாக தரைக்கோ, அல்லது கீழ் பரப்பிற்கோ சென்று விடும்.
இதுதொடர்பாக நாங்கள் உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடும்.
தற்போதைய சூழலில், கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில் செயல்படும் அலுவலகத்தில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முக கவசம் அணிவது நல்ல பலனை தரும். சுகாதார பணியாளர்கள் என்றால் அவர்கள் N95 மாஸ்க்குகளை அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா வைரஸ் காற்றில் மிதக்கும் தன்மை கொண்டது என்றும், காற்று மூலம் அவை பரவும் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்த தகவலை பிரபல பத்திரிகையான அமெரிக்காவின், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருந்தது.
இதற்கு உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.