This Article is From Apr 24, 2020

கொரோனாவால் பலி: டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டில் 300க்கும் மேற்பட்ட கடைகள் மூடல்!

நேற்று முன்தினம் அங்கு புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மார்க்கெட்டின் ஒரு பகுதி கடைகளை மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் ஆசாத்பூர் பகுதியே அதிகாரிகளுக்கு பெரும் கவலையாக உள்ளது.

ஹைலைட்ஸ்

  • டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டில் 300க்கும் மேற்பட்ட கடைகள் மூடல்
  • நேற்று முன்தினம் அங்கு புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • அங்கு 2,800க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
New Delhi:

டெல்லியில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய பழ-காய்கறி சந்தையான ஆசாத்பூர் சப்ஜி மண்டியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் வியாபாரி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்குள்ள 300க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த சந்தையில் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

நேற்று முன்தினம் அங்கு புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மார்க்கெட்டின் ஒரு பகுதி கடைகளை மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 

கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் ஆசாத்பூர் பகுதியே அதிகாரிகளுக்கு பெரும் கவலையாக உள்ளது. அங்கு மிகவும் நெருக்கமான வகையில் 2,800க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில், ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். 

அந்த மார்க்கெட்டில் உள்ள 57 வயது வியாபாரி ஒருவர் உயிரிழந்தை தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த 17 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்.14ம் தேதி அந்த வியாபாரி உயிரிழந்த நிலையில், கடந்த திங்களன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகள் வந்தன. அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. 

இதுதொடர்பாக டெல்லி மாவட்ட துணை ஆட்சியர் தீபக் ஷிண்டே கூறும்போது, அந்த வியாபாரியுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியில் கண்காணிப்புக்குழு ஈடுபட்டு வருகிறது. 

விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த ஆசாத்பூர் மார்க்கெட் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

காய்கறிகள் மற்றும் பழங்களை காலை 6 மணி முதல் 10 மணி வரை விற்பனை செய்யலாம் என்றும், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மார்க்கெட்டுக்குள் வந்து செல்லலாம் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில், 2,376 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,077 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

.