கொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் மத்திய அரசு!!

சீனாவில் இருக்கும் இந்தியர்கள் தங்களது பாஸ்போர்ட் குறித்த விவரங்களை தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் அளிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

உஹான் மாகாணத்தில்தான் கொரோனா வைரஸ் முதலில் பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

New Delhi:

சீனாவை மையமாக கொண்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் சீனாவில் உள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. குறிப்பாக பாதிப்பு அதிகமாக காணப்படும் ஹூபே மாகாணத்தில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டர் பதிவில், 'சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம், சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சீன அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. இதுதொடர்பான விவரங்கள் அவ்வப்போது வெளியிடப்படும்' என்று கூறியுள்ளார். 
 

ஹூபே மாகாணத்தின் தலைநகர் உஹானில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் ஏற்பட்டது. இங்கிருந்ததான், உலகின் பல்வேறு நாடுகளுக்கு வைரஸ் பரவத் தொடங்கியது. 

இங்கு மட்டும் சுமார் 500 இந்திய மாணவர்கள் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் படித்து வருகின்றனர். அவர்களில் சிலர் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், நகரத்தை விட்டுவெளியேறத் தொடங்கினர். தற்போது அங்கு சுமார் 250 முதல் 300 மாணவர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்திடம் தங்களது விவரங்களை தெரிவிக்குமாறு, சீனாவில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அலுவல் காரணங்களுக்காக சீன அதிகாரிகளிடம் பாஸ்போர்ட் தகவல்களை அளித்த இந்தியர்கள், அதே தகவல்களை பாஸ்போர்ட்டுகளுடன் இந்திய தூதரகத்திடம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர். 

இந்திய தூதரகத்தை WeChat -ல் sondhi_0808 என்ற ஐ.டி.யில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது வரையில் மொத்தம் 106 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அறிகுறியுடன் சுமார் 5 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 976 பேர் மோசமான நிலையில் உள்ளனர். 

இதற்கிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இங்குள்ள சர்வதேச விமான நிலையங்களில் வெப்பநிலைமானி மூலமாக பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். அறிகுறிகளுடன் வருவோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இந்த வைரஸ் தாக்குதல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் 430 பேர் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும், எந்த அளவு எளிதாக மற்றவர்களுக்கு பரவும் என்பதையும் விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஏனென்றால், இந்த வைரஸ் புதிதான ஒன்று. எதன் மூலமாக இதனை கட்டுப்படுத்த முடியும் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா தடுப்பு ஊசிகள் இன்னும் 3 மாதங்களில் சந்தைக்கு வரலாம் என்று நம்பப்படுகிறது. 

(With inputs from Agencies)

Listen to the latest songs, only on JioSaavn.com