This Article is From May 25, 2020

முதல் நாளிலே டெல்லி, மும்பை விமான நிலையங்களில் விமானம் ரத்து: பயணிகள் ஆத்திரம்!

Coronavirus Lockdown: டெல்லிக்கு வர வேண்டிய, அங்கிருந்து புறப்பட வேண்டிய 82 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Coronavirus Lockdown: மும்பையில் தினமும் 50 விமானங்கள் வந்து சென்றன.

Mumbai:

2 மாதங்களுக்கு பின்னர் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவைகள் இன்று காலை முதல் மீண்டும் துவங்கிய நிலையில், டெல்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் குழப்பங்களும், குளறுபடிகளும் ஏற்பட்டுள்ளன. விமான நிறுவனங்களில் இருந்து தங்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். 

டெல்லிக்கு வர வேண்டிய, அங்கிருந்து புறப்பட வேண்டிய 82 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கடைசி நிமிடம் வரும் தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கடும் ஆத்திரமடைந்தனர். 

இதேபோல் தான், மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திலும், தங்களது விமானம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல பயணிகள் விமான நிலையங்களுக்கு வெளியே காத்திருந்தனர். 

இதுதொடர்பாக காத்திருக்கும் பெண் பயணி ஒருவர் கூறும்போது, நாங்கள் டெல்லிக்கு செல்ல வேண்டும். அதற்காக விமான நிலையத்தில் காத்திருக்கும்போது தான் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, அந்த விமானத்திற்கு பதிலாக இன்றிரவு வேறு ஒரு விமானம் செல்லலாம் என்று கூறினார். ஆனால், அதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அவர் செல்ல வேண்டிய விமானம் இன்று காலை 11.05 மணிக்கு புறப்பட வேண்டியது. அதற்காக பயணிகள் ஆன்லைனில் மட்டுமே செக்-இன் செய்ய முடியும் நிலையில், அவர் வேறு விமானத்தில் செல்லமுடியுமா என்பது குறித்தும் அவருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.

பாதுகாப்பு அதிகாரிகள் தெர்மல் சோதனை, ஆரோக்யா சேது செயலி வைத்துள்ளார்களா போன்ற சோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் மும்பை விமான நிலையத்தின் புறப்படும் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். 

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விமான சேவைகளை துவங்குவதற்கு அவகாசம் கோரிய நிலையில் கடைசி நேரத்தில் 25 விமானங்களை மட்டும் இயக்குவதற்கு அனுமதித்தது. 

சென்னை விமான நிலையத்தில், அதிருப்தி அடைந்த பயணிகள் தங்களது விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக பயணி ஒருவர் கூறும்போது, ஊரடங்கு காரணமாக மார்ச்.15ம் தேதி முதல் நாங்கள் இங்கு சிக்கியிருக்கிறோம். நேற்றைய தினம் மும்பை செல்வதற்கு மூன்று டிக்கெட்டுகள் பதிவு செய்திருந்தோம். ஆனால் இங்கு வந்தால் எங்களது டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எங்களுக்கு பதிலளிக்கவும், உதவி செய்வதற்கும் இங்கு யாருமில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை என்று அவர் வேதனையுடன் கூறினார். 

பெங்களூரு கேம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

.