This Article is From Apr 22, 2020

மத்திய குழுவுடனான மோதல் போக்கை நிறுத்திக்கொண்டது மேற்கு வங்கம்!

மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசு 6 குழுக்களை அமைத்திருக்கிறது.

மத்திய குழுவுடனான மோதல் போக்கை நிறுத்திக்கொண்டது மேற்கு வங்கம்!

மேற்கு வங்கம் - மத்திய அரசு இடையிலான மோதல் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹைலைட்ஸ்

  • மேற்கு வங்கம், ராஜஸ்தான், ம.பி., மகாராஷ்டிராவில் ஆய்வு செய்ய குழு அமைப்பு
  • மேற்கு வங்கம் - மத்திய அரசுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல்
  • முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என மேற்கு வங்க அரசு கடிதம்
Kolkata:

மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஊரடங்கை கண்காணிக்கும் சிறப்புக்குழுவுடனான மோதல் போக்கை மேற்கு வங்க அரசு நிறுத்திக்கொண்டுள்ளது. மத்தியக்குழுவுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்திருக்கிறது. 

மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசு 6 குழுக்களை அமைத்திருக்கிறது.
 

குறிப்பாக மத்திய பிரதேசத்தின் இந்தூர், மகாராஷ்டிராவின் மும்பை, புனே, மேற்கு வங்கத்தின் ஹவுரா, 24 வடக்கு பர்கானா, டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி, கிழக்கு மேதினியூர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. இங்கு முழுமையாக ஊரடங்கை நிலை நாட்டினால் மட்டுமே கொரோனா பரவலை தடுத்து நிறுத்த முடியும் என மத்திய அரசு கருகிறது.

எனவே, ஊரடங்கை கண்காணிக்க 6 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதில் இருந்த அதிகாரிகள் பார்வையிட தொடங்கினர். அவர்கள், ஊரடங்கு நடைமுறைப்படுத்தும் விதம், கட்டுப்பாடுகள், சுகாதார வசதிகள், பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள். 

சிறப்புக்குழு அனுப்பப்பட்ட 4-ல் 3 மாநிலங்கள் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களாகும். எனவே இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக மோதல்கள் எழுந்தன. 

சிறப்புக்குழு அமைக்கப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியிருந்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, மேற்கு வங்க தலைமை செயலர் ராஜிவ் சின்ஹாவுக்கு கடிதம் மூலமாகவும், தொலைப்பேசி மூலமாகவும் கண்டனம் தொவித்திருந்தார். இந்த நிலையில் சிறப்புக்குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று மேற்கு வங்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேற்கு வங்க தலைமை செயலர் ராஜிவ் சின்ஹா மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ''சிறப்புக்குழுவுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுவது உண்மை அல்ல. அவர்கள் எங்களிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் திடீரென வந்தனர். மத்திய குழுவுக்கு தேவையான முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் அரசுகளும் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள சிறப்புக்குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளன.

.