This Article is From Apr 06, 2020

மக்கள் காட்டும் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் யாரும் எதிர்பார்க்காதது: மோடி பெருமிதம்

BJP Sthapana Diwas: பாஜகவின் 40-வது நிறுவன நாள் தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவுக்கு எதிரான ஒரு நீண்ட போராக இருக்கும், ஆனால், அதற்காக நாம் சோர்ந்துவிடக்கூடாது. இந்த போரில் வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மக்கள் காட்டும் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் யாரும் எதிர்பார்காதது: மோடி பெருமிதம்

ஹைலைட்ஸ்

  • மக்கள் காட்டும் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் யாரும் எதிர்பார்காதது
  • கொரோனாவுக்கு எதிரான போராட்டம் போரை விட குறைவானது அல்ல
  • இந்த போரில் வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும்
New Delhi:

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க மக்கள் காட்டும் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் யாரும் எதிர்பார்க்காதது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்த நிலையில், நேற்றிரவு லட்சக்கணக்கான நாட்டு மக்கள் கொரோனாவுக்கு எதிராக மின்விளக்குகளை அனைத்து, அகல் விளக்குகளை ஏற்றியும், பட்டாசு வெடித்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் தங்களது வீட்டு பால்கனியில் இருந்தபடி கோஷங்கள் எழுப்பியும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். 

இந்நிலையில், பாஜகவின் 40-வது நிறுவன நாள் தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் இன்று வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவுக்கு எதிரான போராட்டம் ஒரு நீண்ட போராக இருக்கும், ஆனால், அதற்காக நாம் சோர்ந்துவிடக்கூடாது. இந்த போரில் வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் இந்தியாவின் கூட்டு வலிமையை காட்டும் வகையில், நேற்றிரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு நாடு முழுவதும் பொது மக்கள் தங்கள் வீடுகளிலிருந்த படியே, மின்விளக்குகளை அனைத்து, அகல் விளக்குகளை ஏற்றி தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தியது குறித்து பேசிய பிரதமர் மோடி, நேற்றிரவு நமது கூட்டு வலிமையைக் காண முடிந்தது என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து, ஏழைகள் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக பணியாற்றுவது உள்ளிட்ட 5 அம்ச திட்டத்தைப் பின்பற்றுமாறு அவர் கட்சி நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார். மேலும், கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 

மேலும், கொரோனாவுக்கு எதிரான போராட்டம் போரை விட குறைவானது அல்ல. எனவே பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் பிரதமர் நிவாரண நிதிக்கு போதிய நிதி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளைத் திரட்டி அமைக்கப்பட்ட ஜனதா கட்சியுடன் 1977ல் இணைந்த ஜனசங்கத்தின் தலைவர்களால் 1980ல் பாஜக நிறுவப்பட்டது. இதைத்தொடர்ந்து, 1984ல் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் பாஜக இரண்டு இடங்களை மட்டுமே வென்றது. 

ஆனால், அதன் பின்னர் நாளுக்கு நாள் பன்மடங்கு வலிமையடைந்து, 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் பெரும்பான்மையை வென்றது. இதைத்தொடர்ந்து, 2019ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் மீண்டும் அதன் வெற்றியை உறுதிசெய்தது. 

.