This Article is From Mar 28, 2020

சமூக விலகல் ஒழுங்காக கடைப்பிடிக்கப்படுகிறதா? சர்ச்சையை ஏற்படுத்திய முதல்வரின் சந்திப்பு!!

'சமூக விலகல் நமக்கு மட்டுமல்ல. நம் அனைவருக்கும்' என்று அதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சமூக விலகல் ஒழுங்காக கடைப்பிடிக்கப்படுகிறதா? சர்ச்சையை ஏற்படுத்திய முதல்வரின் சந்திப்பு!!

தமிழக முதல்வரின் செய்தியாளர் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படம்.

ஹைலைட்ஸ்

  • சமூக விலகலை கடைபிடிக்க மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன
  • செய்தியாளர் சந்திப்பின்போது முதல்வரை அதிகாரிகள்,போலீசார் சூழ்ந்திருந்தனர்
  • முக்கிய கூட்டங்களிலேயே சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதில்லை என புகார்
Chennai:

கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. ஆனால் தமிழக முதல்வர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது காணப்பட்ட காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 

தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குநரக வளாகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, சமூக விலகலை உறுதி செய்வதற்கான எந்த ஏற்பாடும் செய்தியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் செய்து தரப்படவில்லை.

முதல்வர் கூட, மூத்த சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளால் நெருக்கமாகச் சூழப்பட்டிருந்தார். அவர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என்பதைக் காண முடிந்தது. 

அதேநேரத்தில், செய்தியாளர்கள் எழுப்பிய கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கும், அதிகாரிகள் தரப்பில் சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. 

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் சமூக விலகலை கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நாடு முழுவதும் மளிகை, காய்கறி கடைகளுக்குச் செல்லும் மக்கள், ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வட்டமிட்டு அதற்குள் நின்று, சமூக விலகலை கடைப்பிடிக்கின்றனர். இதே முறையை அனைத்து தளங்களிலும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. 

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, சமூக விலகல் என்பது தனி நபருக்காக மட்டுமல்லாமல் நாட்டு மக்கள் அனைவருக்காகவும்தான் என்று கூறியிருந்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்திருக்கிறது. நாடு முழுக்க 800க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவை எதிர்கொள்ள 500 மருத்துவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிதாக நியமித்துள்ளார். இதேபோன்று மற்ற மருத்துவத்துறை பணியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர்.

காய்கறிக் கடைகள், மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 முதல் மதியம் 2.30 வரையிலும், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் மாலை 6 முதல் காலை 6 மணி வரையிலும் மட்டுமே இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பால் சென்னையில் பெரும்பாலான உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, ஜொமேட்டோ ஆகியவை செயல்படத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இருப்பினும் இந்த நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, காலை உணவு டெலிவரியை காலை 7 முதல் 9.30-க்குள்ளும், மதிய உணவு டெலிவரியை பகல் 12 முதல் மதியம் 2.30 மணிக்குள்ளும், இரவு உணவு டெலிவரியை மாலை 6 -லிருந்து இரவு 9 மணிக்குள்ளும் முடித்துக் கொள்ள வேண்டும். 

ஸ்விக்கி, ஜொமேட்டோ நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகள் போலீசாரின் அனுமதி சீட்டை பெற்றிருக்க வேண்டும். மேலும், பிரதிநிதிகளின் உடல் நிலை நாள்தோறும் சோதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. 

.