This Article is From Mar 26, 2020

அத்தியாவசிய பொருட்களைக் கொண்டுவரும் முகவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துவதாகப் புகார்!!

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், தங்களது விற்பனை பிரதிநிதிகளை போலீசார் தாக்குவதாகவும், அத்தியாவசிய பொருட்களுக்கு தடையில்லை என்று அரசு அறிவித்திருக்கும் நிலையில் போலீசாரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளன.

அத்தியாவசிய பொருட்களைக் கொண்டுவரும் முகவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துவதாகப் புகார்!!

ஊரடங்கு உத்தரவு அமலில் அமலில் இருக்கும் நிலையில், வெளியே வந்தவர்களை விரட்டும் போலீசார்.

ஹைலைட்ஸ்

  • ஆன்லைன் மூலம் மக்கள் அத்தியாவசிய பொருட்களை ஆர்டர் செய்கின்றனர்
  • டெலிவரி கொண்டு வருவோரிடம் போலீசார் தீவிர விசாரணை
  • போலீசார் மீது ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளனர்
New Delhi:

ஆன்லைன் மூலம் அத்தியாவசிய பொருட்களை கொண்டுவரும் முகவர்கள் மீது போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன. இதனால், மக்களுக்கு பயன்படும் பொருட்கள் யாருக்கும் பயனின்றி அப்புறப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. அத்தியாவசிய தேவையை தவிர்த்து மற்றவற்றுக்கு வெளியே செல்ல பொதுமக்களுக்கு அனுமதியில்லை. 

நாட்டின் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அடையாள அட்டையின்றி வெளியே வரும் நபர்கள், கடும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 

அத்தியாவசிய பொருட்களுக்கு தடையில்லை என்பதால் மக்கள் சிலர் ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை பெற்ற வருகின்றனர். அவ்வாறு டெலிவரி கொண்டு வரும் முகவர்கள் போலீசாரின் தாக்குதலுக்கு ஆளாகுவதாக புகார்கள் எழுந்துள்ளன. 

இதுகுறித்து பிக் பேஸ்கட், ஃப்ரஷ்மெனு, போர்ஷியா மெடிக்கல்ஸ் போன்ற ஆன்லைன் வர்த்த நிறுவனங்கள் ப்ரோமோட்டர் கணேஷ் கூறுகையில், 'கடந்த சில நாட்களாக போலீசார் எங்களது ஏஜெண்டுகளை தாக்கி வருகின்றனர். சிலர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது எங்களது பணியில் பெரும் இடையூராக உள்ளது. 

அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கு தடை ஏதும் இல்லையென்று அரசே அறிவித்து விட்டது. நாங்களும் ஆன்லைனில் மளிகைப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள் போன்றவற்றைத்தான் எடுத்துச் செல்கிறோம்.

எங்களது அவசியமான சேவைகளை போலீசார் சிலர் புரிந்துகொள்ளவில்லை. எங்கள் முகவர்களை தயவு செய்து தாக்காதீர்கள். தவறு செய்திருப்பார்கள் என்றால் அபராதம் விதியுங்கள்.' என்று கூறியுள்ளார்.

அவரது கருத்தை மற்ற சில ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் பதிவுசெய்துள்ளன. மளிகைப் பொருட்கள் மற்றும் பாலை ஆன்லைனில் விற்பனை செய்யும் மில்க் பேஸ்கெட் என்ற நிறுவனம், 15 ஆயிரம் லிட்டர் பால் மற்றம் 10 ஆயிரம் கிலோ காய்கறிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. 

ஊரடங்கின் 2-வது நாளன்று தங்களால் பாலை குர்கான், நொய்டா, ஐதராபாத் நகரங்களில் வழங்க முடியாது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதேபோன்று உணவகத்திற்கு வந்து பார்சல் எடுத்துச் செல்லும் டேக் அவே முறையும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவகத்திற்கு பார்சல் வாங்க வருவோர் போலீசாரால் மடக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன. இதற்கிடையே இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-யை தாண்டியுள்ளது. 

.