This Article is From Mar 18, 2020

கொரோனா அச்சுறுத்தல் : 'எல்லோரும் மாஸ்க் அணிவது கட்டாயமா?' - மத்திய அரசு விளக்கம்

கொரோனா இந்தியாவில் பரவி வருவதைத் தொடர்ந்து, சானிட்டைசர்ஸ், மாஸ்க் உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் : 'எல்லோரும் மாஸ்க் அணிவது கட்டாயமா?' - மத்திய அரசு விளக்கம்

மாஸ்க் அணிவது கட்டாயமா என்ற சந்தேகத்திற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • மாஸ்க் அணிவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
  • மாஸ்க், சானிட்டைசர்கள் விற்பனை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது
  • அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்கிறது மத்திய அரசு
New Delhi:

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வரும் நிலையில், மக்கள் எல்லோரும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே மாஸ்க் வாங்குவதற்கு மக்கள் அக்கறை செலுத்துவதால் அதற்கும், சானிட்டைசர்களுக்கும் கிராக்கி நிலவுகிறது.

மாஸ்க் அணிந்து கொண்டு சென்றால் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியும் என்ற கருத்து சமூகத்தில் காணப்படுகிறது.

இந்த நிலையில், யாரெல்லாம் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்ற விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அதன் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது-

எல்லோரும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. 3 பிரிவினர் மட்டுமே மாஸ்க் அணிய வேண்டும். அவர்கள் யாரென்றால்....

1. சளி, இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உடையவர்கள்.

2. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அறிகுறி உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிப்பவர்கள்.

3. நோயாளிகளைக் கவனிக்கும் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகிய இந்த 3 தரப்பினர் மட்டுமே கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.

இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137- ஆக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தாக்குதலில் உயிரிழப்பு 3- ஆக உள்ளது. 
ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பயணிகள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை உறுதி செய்யத் தனியார் ஆய்வகங்களும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று மருத்துவ ஆய்வுக்கான இந்திய கவுன்சில் தெரிவித்துள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அரியானாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிரா. இங்கு 39 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

துபாயிலிருந்து மார்ச் 5-ம்தேதி மும்பைக்கு வந்த நபர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவர் தனது பயண விவரங்கள் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. மூச்சு விடுவதற்குச் சிரமம் ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். 

டெல்லி அருகே நொய்டாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளது. லடாக்கில் 3 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.