கொரோனா மரண எண்ணிக்கையில் செய்த பிழையை ஒப்புக்கொண்ட சீனா… வரிந்துகட்டும் டிரம்ப்!!

Coronavirus: சீனத் தரப்போ, உஹானில் உள்ள வன விலங்கு சந்தையிலிருந்துதான் இந்த வைரஸ், மனிதர்களுக்குப் பரவியது என்று தொடர்ந்து சொல்லி வருகிறது. 

கொரோனா மரண எண்ணிக்கையில் செய்த பிழையை ஒப்புக்கொண்ட சீனா… வரிந்துகட்டும் டிரம்ப்!!

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொள்ளவில்லை என்றும், பல்வேறு விவகாரங்களை மூடி மறைத்ததாகவும்...

ஹைலைட்ஸ்

  • உஹான் நகரத்தில் கொரோனா மரண எண்ணிக்கை 50% உயர்வு
  • தொடக்கத்தில் மரண எண்ணிக்கையில் செய்த பிழைதான் இதற்கு காரணம் என விளக்கம்
  • சீனாவின் ஒப்புதலால் டிரம்ப் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்
Washington:

சீனாவின் உஹான் நகரம்தான், உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் மையமாக இருந்தது. தற்போது உஹான் நகரம், கொரோனாவிலிருந்து விடுபட்டு மீண்டு வந்திருக்கிறது. ஆனால், கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை இவ்வளவுதான் என்று சீன அரசு கணக்குக் காட்டியதைப் பலரும் சந்தேகக் கண்ணோடுப் பார்த்து வருகின்றனர். சிலர், பகிரங்கமாகச் சீனா மீது குற்றம் சாட்டினர். 

இப்படிப்பட்ட சூழலில், உஹானில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை சுமார் 50 சதவீதம் உயர்த்தியுள்ளது சீன அரசு தரப்பு. இறப்பு எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் தவறு நடந்து விட்டதாகவும், அதனால்தான் தற்போது அதன் சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் காரணம் சொல்லப்படுகிறது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவின் உண்மையான மரண எண்ணிக்கை விகிதமானது மிக மிக அதிகமாக இருக்கும் என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில், “கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிராயல் ஏற்பட்ட உயிரிழப்பு, இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என்று சீனா கூறியுள்ளது. உண்மையில், அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் மரணங்களைவிட அது மிக மிக அதிகமாக இருக்கும்,” என்று விமர்சித்துள்ளார். 

உஹான் நகர நிர்வாகம், இந்த விவகாரம் குறித்து தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன்படி, உஹானில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையில் 1,290 பேரை சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உஹானில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,869 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொள்ளவில்லை என்றும், பல்வேறு விவகாரங்களை மூடி மறைத்ததாகவும் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், உஹானின் சோதனைக் கூடத்திலிருந்து இந்த வைரஸ் பரவியதா என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகின்றன. 

ஆனால் சீனத் தரப்போ, உஹானில் உள்ள வன விலங்கு சந்தையிலிருந்துதான் இந்த வைரஸ், மனிதர்களுக்குப் பரவியது என்று தொடர்ந்து சொல்லி வருகிறது. 

தற்போது உஹானில் கொரோனா மரணங்கள் தவறுதலாகக் கணக்கிடப்பட்டது குறித்து அந்நகர அரசு, ‘கொரோனா வைரஸ் பூதாகரமான போது, அரசு பணியாளர்களால் அனைத்து விஷயங்களையும் சரியாகக் கையாள முடியவில்லை. பல நேரங்களில் முக்கிய விவகாரங்கள் தாமதகாவும், சில நேரங்களில் ஆவணப்படுத்தப்படாமலும் போனது. ஆரம்பக் கட்டத்தில் எங்களால் எல்லோருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க முடியவில்லை. சிலர், வீட்டிலேயே கொரோனா தொற்றால் இறந்து போனார்கள். அது குறித்தும் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை,' என விளக்கம் கொடுத்துள்ளது.