This Article is From Apr 06, 2020

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அறிவித்த மத்திய அரசு!

தொற்று பாதிப்புக்கு உள்ளான பகுதிகளிலிருந்து நான்கு வாரங்களுக்கு யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும்

பாதிக்கப்பட்ட நபரைச் சார்ந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு முற்றிலுமாக தனிமைப்படுத்தப்படும்.

New Delhi:

கொரோனா வைரஸ் தொற்று சர்வதேச அளவில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த தொற்றால் இறந்திருக்கின்றனர். இதனால் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனா தொற்றால் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80க்கும் அதிகமானோர் மரணமடைந்திருக்கின்றனர். நாடு முழுவதும் 274 மாவட்டங்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தொற்றினை கட்டுப்படுத்த ஏற்கெனவே நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் புதிய ஆக்கிரமிப்பு திட்டத்தினை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு நான்கு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்படும் என்று இந்த அறிவிப்பில் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதன் மூலமாகத் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட இந்த தொற்றானது, இதற்கு முன்பு மனித சமூகம் கண்டிராத தொற்றாகும். இதற்கு மருந்துகள் இதுவரை கண்டறியப்படாத சூழலில், சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிப்பதே இதற்குக் காரணம் என்று அறியப்பட்டது. இதன் மூலமாக தொற்று பரவல் சங்கிலியை உடைத்து பரவாமல் கட்டுப்படுத்த முடியும்.

m9uf0c18

தொற்று பாதிப்புக்கு உள்ளான பகுதிகளிலிருந்து நான்கு வாரங்களுக்கு யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் என்று, மத்திய அரசின் சுகாதார துறை அறிக்கை குறிப்பிடுகின்றது.  மேலும், பாதிக்கப்பட்ட நபரைச் சார்ந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு முற்றிலுமாக தனிமைப்படுத்தப்படும். தொற்று அறிகுறி எவருக்கேனும் உள்ளது என கண்டறியப்பட்டால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

தொற்று அறிகுறி உள்ளவர்கள் இரண்டு முறை சோதிக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பிறகே அவர்கள் மருத்துவமனைகளிலிருந்து வெளியேற அனுமதியளிக்கப்படுவார்கள். லேசான அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். சற்று மிதமான அறிகுறி உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கான மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள். கடுமையான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பாதிப்புகள் உள்ள பகுதிகள் முடக்கப்பட்டு அப்பகுதிகளில் பள்ளி கல்லூரிகள் மூடப்படும். மேலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டு அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், கோவிட்-19 கொரோனா தொற்று வைரஸ் பரவல், எச்1என்1 தொற்று காய்ச்சலின் பரவலைப் பிரதிபலிக்கிறது என்றும் சுகாதார அமைச்சக ஆவணம் கூறுகிறது.

சீனாவில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த பெரிய அளவில் யுக்திகள் கடைப்பிடிக்கப்பட்டன. மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நிலையில், பொது சுகாதாரம் தனது பணியை சிறப்பாக மேற்கொள்ளும்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று நிரூபித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடையே பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் மூன்று அடுக்கு அறுவை சிகிச்சை முகமூடி மற்றும் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 472 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் புதியதாக 86 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.  டெல்லியில்  நடைபெற்ற மதம் சார்ந்த நிகழ்வில் பங்கெடுத்தவர்கள் பெரும்பாலும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மட்டும், இந்தியாவில் 601 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாததாகும்.

.