"யாரெல்லாம் வெளியில் சுற்றி வருகிறார்களோ, அவர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளோம்"
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
- தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது
- அரசு பேருந்துகள் இயக்கமும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருக்கிறது. இந்நிலையில், ‘வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்' என்று தமிழக அரசு, சிலருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதையும் மீறி அவர்கள், வெளியில் சுற்றி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கலிபோர்னியாவிலிருந்து வந்த நபருக்கும், துபாயிலிருந்து வந்த நபருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் கலிபோர்னியாவிலிருந்து வந்த நபர் சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையிலும், துபாயிலிருந்து வந்த நபர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் ட்விட்டில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இருவரின் உடல் நிலையும் சீராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
இந்நிலையில் அவர், “சிலரால் கொரோனா பரவக்கூடி வாய்ப்பு இருப்பதாகக் கருதி, அவர்கள் வீட்டிங் தனிமையில் இருக்க வேண்டும் என்று அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி அவர்கள் வெளியில் சுற்றி வருகிறார்கள். இதனால் மற்றவர்களுக்குக் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்கும் நோக்கில் யாரெல்லாம் வெளியில் சுற்றி வருகிறார்களோ, அவர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளோம். யாராவது அரசின் உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்டால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்துள்ளார்.