'கொரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்கா பீதியை கிளப்பியது; உதவி ஏதும் செய்யவில்லை' : சீனா

“கேரளாவில் 3வது நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உஹானிலிருந்து அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார். வைரஸ் பாதிப்புடைய அந்த நபர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்,” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

'கொரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்கா பீதியை கிளப்பியது; உதவி ஏதும் செய்யவில்லை' : சீனா

இந்தியா உள்பட 24 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் அதுகுறித்து அமெரிக்கா பீதியைத்தான் கிளப்பியதே தவிர, உதவி ஏதும் தங்களுக்கு செய்யவில்லை என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் சீன பயணிகளுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கடந்த வெள்ளிக் கிழமையன்று சுகாதார எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டதுடன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சீனாவில் பயணம் செய்த வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் வரவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்து. 

இதற்கிடையே, சீனாவில் இருந்து திரும்பிய அமெரிக்கர்கள் 14 நாட்கள் கட்டாய மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அமெரிக்காவை பொருத்தளவில் மொத்தம் 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் அளித்துள்ள பேட்டியில், கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் விஷயத்தில் அமெரிக்கா பீதியைத்தான் கிளப்பி வருகிறது; ஆக்கப்பூர்வமான முறையில் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். 

இந்தியா உள்பட 24 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது.இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் 350-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். சீனாவில் உஹான் நகரத்தில்தான் இந்த வைரஸ் தொற்று உருவாகி, மற்ற இடங்களுக்குப் பரவி வருகிறது. தற்போது கேரளாவுக்குத் திரும்பியுள்ள உஹானிலிருந்த 3 மாணவிகளுக்குத்தான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், 20 நாடுகளில் பரவியுள்ள நிலையில், அதை உலக சுகாதார அவசரநிலையாக பிரகடனப்படுத்தியுள்ளது உலக சுகாதார அமைப்பு. 

“கேரளாவில் 3வது நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உஹானிலிருந்து அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார். வைரஸ் பாதிப்புடைய அந்த நபர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்,” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

“காசார்கோட்டில் இருக்கும் கஞ்சங்காடு மாவட்ட மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா கூறியுள்ளார். 

இதுவரை கண்டறியப்பட்டுள்ள 3 பாதிப்புகளுமே கேரள மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்துள்ளன. அம்மாநிலத்தில் 1,700 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்கிற சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் 70 பேர் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.