This Article is From Apr 08, 2020

ஒரேநாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று! தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738-ஆக உயர்வு

நேற்று மட்டும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று எண்ணிக்கை 48 ஆக குறைந்திருக்கிறது.

ஒரேநாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று! தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738-ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 738 ஆக உயர்வு
  • சிகிச்சை பெறுவோரில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது
  • 679 பேருக்கு ஒரே இடத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 679 பேர் ஒரே குழுவில் இருந்தவர்கள் என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் நிலைக்கு சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறோம். 

தமிழகத்தில் போதுமான முகக் கவசங்கள் இருப்பில் உள்ளன. இன்றைக்கு புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 738 ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 5 பேரின் உடல்நிலை மட்டும்தான் சற்று கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்கள் உடல்நிலை சீராக காணப்படுகிறது. 

இன்று 48 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. இவர்களில் 4 பேருக்கு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். 21 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக 72 வயது முதியவர் உள்பட 2 பேர் இன்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.  

சென்னையில் புதிதாக 7 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 156. நேற்று வேலூரில் உயிரிழந்த ஒருவர் உள்பட மொத்தம் 8 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் 60,739 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அரசு கண்காணிப்பில் 230 பேர் உள்ளனர். 6,095 பேரிடம் சோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. 32,075 பேர் 28 நாட்கள் கண்காணிப்பை முடித்துள்ளனர். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

.