This Article is From May 02, 2020

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000ஐ கடந்தது: முக்கியத் தகவல்கள்!

முன்னதாக 13 சதவிகிதமாக இருந்த குணமடைந்தோரின் விகிதம் தற்போது 25.36 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000ஐ கடந்தது: முக்கியத் தகவல்கள்!

இதுவரை நாடு முழுவதும் 1,147 பேர் உயிரிழந்துள்ளனர்

New Delhi:

தேசிய அளவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 74 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,993பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக புதியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 35,043 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,147 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக, கடந்த இரண்டு வாரங்களை விட தற்போது குணமடைந்தோரின் சதவிகிதம் அதிகரித்துள்ளது. முன்னதாக 13 சதவிகிதமாக இருந்த குணமடைந்தோரின் விகிதம் தற்போது 25.36 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலின் விகிதமும் நாடு முழுவதும் இரட்டிப்பாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • நாடு முழுவதும் மொத்தமாக 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 319 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும், 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.
  • தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை மீட்டெடுப்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டார். இதில், “இந்தியாவிற்கு முதலீடுகளை விரைவான பாதையில் கொண்டு வருவதற்கும், இந்திய உள்நாட்டு துறைகளை மேம்படுத்துவதற்கும் பல்வேறு உத்திகள் விவாதிக்கப்பட்டன. மேலும், முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக முனைப்புடன் செயல்படுவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.“ என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேசிய அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இம்மாநிலத்தில் இதுவரை 10,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை 450க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல தேசிய அளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரமாக மும்பை உள்ளது. மும்பையில் மட்டும் 7,000க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டனர். தமிழகத்தைப் பொறுத்த அளவில் முன்னெப்போதும்  இல்லாத அளவாக நேற்று 161 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டனர். தமிழகத்தில் தற்போது வரை 2,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1,258 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தமிழகம் போல பஞ்சாப் மாநிலத்திலும் நேற்று ஒரே நாளில் 105 பேர்  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்தேத் நகரில் சிக்கியுள்ள பஞ்சாப் யாத்திரிகளுக்கு மகாராஷ்டிரா அரசு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளவில்லை என பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மகாராஷ்டிரா அரசு யாத்திரிகர்களுக்கு உதவவில்லை என்றும் கூறியுள்ளார்.
  • தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் கட்டுப்பாட்டு மண்டலங்களில் தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 14 நாட்களில் இந்த கட்டுப்பாட்டு மண்டலங்களில் மூன்று முறை பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 98 கட்டுப்பாட்டு மண்டலங்களைக் கொண்டுள்ள டெல்லியில், 11 கட்டுப்பாட்டு மண்டலங்களில் 1 லட்சம் பேர் அடங்கியுள்ளனர்.
  • தேசிய அளவில் கொரோனா தொற்று பரவலைப் பொருத்தமட்டில், வடகிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் பரவல் குறைந்த அளவாக உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் தொற்று பரவல் கிட்டதட்ட பூஜ்யமாகவும், தெலுங்கானா, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா மற்றும் ஹரியானாவில் மாநிலங்களில் தொற்று பரவல் ஒரு நாளைக்கு 3 சதவீதத்திற்கும் குறைவாகவும் உள்ளது. இம்மாநிலங்களில் தொற்று பரவல் இருமடங்காக உயர 20 நாட்களாகும் என மத்திய சுகாதாரத்துறை ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன. பத்து நாட்களுக்கு முன்பு இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் இருமடங்காக உயர 8 நாட்கள் போதுமானதாக இருந்தன. ஆனால் தற்போது 14 நாட்கள் தேவைப்படுகிறது.
  • மும்பையில் முன்னதாக 55 வயதான காவல்துறையினர் 3 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உத்தராகாண்ட் அரசு 55 வயதிற்கு மேற்பட்ட காவலர்கள் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடுத்துவதை நிறுத்தியுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் மட்டும் காவல்துறையினருக்கான சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • மே 4 முதல் முழு முடக்க(LOCKDOWN) கட்டுப்பாடு முடிவடைய உள்ள நிலையில் தொற்று பரவல் இல்லாத மாவட்டங்களில், மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்த தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும் என உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
  • முதன் முதலில் சீனாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர், தற்போது வரை சர்வதேச அளவில் 33 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளின் வல்லரசு என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் மட்டும் 62,000க்கும் அதிகமானோர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

.