This Article is From Mar 27, 2020

'நெருக்கடி காலகட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்' - சீமான்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம்தேதி வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்களைத் தவிர்த்து மற்ற பொருட்களை கொண்டு செல்ல வாகனங்களுக்கும், விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

'நெருக்கடி காலகட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்' - சீமான்

காவல்துறையினர் அத்துமீறி நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஹைலைட்ஸ்

  • நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது
  • ஊரடங்கை காக்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்
  • மனிதாபிமானத்துடன் காவலர்கள் நடந்து கொள்ள வேண்டுமென சீமான் கோரிக்கை

நெருக்கடி காலகட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம்தேதி வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்களைத் தவிர்த்து மற்ற பொருட்களைக் கொண்டு செல்ல வாகனங்களுக்கும், விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஊரடங்கை நிலை நாட்டும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அத்துமீறி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

கொரோனோ கொடிய நுண்ணுயிரி தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வண்ணம் தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு நடைபெற்றுவருகிறது. மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள் கட்டளையாகவும், வேண்டுகோளாகவும் விடுத்த அறிவிப்புகளை ஏற்றும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விடுத்த கோரிக்கைக்குச் செவிசாய்த்தும் நாடு முழுவதும் இந்தப் பேரிடர் கால ஊரடங்கிற்கு மக்கள் பெரும் ஒத்துழைப்பு அளித்துவருகின்றனர். இந்நேரத்தில் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எதிர்வரும் நாட்களிலும் இன்னும் சிறப்பாகவும், ஒற்றுமையாகவும் அரசுக்கு ஒத்துழைத்து ஊரடங்கை முழுமையாக வெற்றிபெறச் செய்வதன்மூலம் கொரோன நுண்ணுயிரியின் நோய்த் தாக்கத்திலிருந்து நாட்டை முழுமையாக விடுவிப்போம்.

அதே நேரத்தில், காலம் தாழ்ந்து அவசரகதியில் ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் அடுத்தடுத்து அறிவித்த போதும் மக்கள் நிலைமையின் தீவிரத்தை உடனடியாக உணர்ந்து அதற்கேற்றவாறு தம்மை ஆயத்தப்படுத்திக்கொண்டு அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளித்துவரும் இந்தச் சூழ்நிலையில் ஆங்காங்கே நடைபெறும் காவல்துறையின் ஓரிரு அத்துமீறிய தாக்குதல் சம்பவங்கள் தமிழக அரசு சிறப்பாக முன்னெடுத்துவரும் போர்க்கால அடிப்படையிலான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளின் மீதான செயல்பாடுகளுக்குப் பெருத்த களங்கத்தை விளைவிப்பதுடன் அரசிற்கு அவப்பெயரையும் ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக மக்கள் மிகுந்த கட்டுக்கோப்புடனும், கடமையுணர்வுடனும் இந்த ஊரடங்கை மிகக் கண்ணியமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். எனினும், பால், காய்கறிகள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வெளிவர வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதிலும், குறிப்பாக பால் , காய்கறி ஆகியவற்றின் விற்பனை நேரம், இடம் குறித்தான முன்னுக்குப் பின் முரணான தகவல்களால் மக்களிடையே குழப்பமும், அச்சமும் ஏற்பட்டு உடனடியாக அவைகளை வாங்க வேண்டும் என்ற அவசரகதி உருவாகிவிட்டது. முறையான வழிகாட்டுதலின்மையால் அப்படி வெளிவந்த மக்களையும், இளைஞர்களையும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கத் தடையில்லை என்று அறிவித்தபின்னும் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குவது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும், ஏற்றுக்கொள்ளவே முடியாத செயலாகும்.

மக்களிடமும் இளைஞர்களிடம் அன்பாக அறிவுறுத்திய பல காவலர்களின் காணொளிகள் வெளிவந்து காவல்துறை மீதான நன்மதிப்பை மக்களிடத்தில் உயர்த்திய நேரத்தில் இதுபோன்ற சில சம்பவங்கள் அந்த நன்மதிப்பை முற்றிலுமாகச் சீர்குலைத்துவிட்டது என்பது மிகவும் வருந்தத்தக்கச் செய்தி. எனவே, தமிழக அரசு இதில் உடனடியாகக் கவனம் செலுத்தி அத்தியாவசியப் பொருட்கள் அரசு சார்பாகவும், தனியார் மூலமாகவும் வழங்குவதற்கான இடம், நாள், நேரம் ஆகியவற்றை வகைப்படுத்தி முறையான அட்டவணையை வெளியிட்டு மக்களிடையே தேவையற்ற வதந்திகளும், குழப்பங்களும் ஏற்படுவதைத் தவிர்க்குமாறும், காவல்துறைக்கு மனிதாபிமானத்துடன் கூடிய கண்டிப்பை மக்களிடம் கடைப்பிடிப்பதற்கான உத்தரவினை உடனடியாகப் பிறப்பிக்குமாறும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

.