டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் தனிமைப்படுத்தப்பட்ட நெல்லை மேலப்பாளையம்!!

மேலப்பாளையத்திலிருந்து வெளியாட்கள் யாரும் உள்ளே செல்லவும், உள்ளே இருந்து மக்கள் யாரும் வெளியே வரவும் அனுமதி இல்லை என ஆட்சியர் ஷில்பா பிரபாகர் அறிவித்துள்ளார்.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் தனிமைப்படுத்தப்பட்ட நெல்லை மேலப்பாளையம்!!

மேலப்பாளைய மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே இருப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 400 பேருக்கு கொரோனா அறிகுறி
  • மாநாட்டில் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த சிலர் பங்கேற்றுள்ளனர்
  • கொரோனா அச்சத்தால் மேலப்பாளையம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நெல்லையைச் சேர்ந்த 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலப்பாளையத்தை சேர்ந்த சிலரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பி வந்திருப்பதால், ஒட்டுமொத்த ஊரையே தனிமைப்படுத்தி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது-

மேலப்பாளையம் நகராட்சியில் வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து அதிகளவில் மக்கள் திரும்பி வந்துள்ளனர். அந்த பகுதியில் கொரோன தொற்று பரவாமல் இருக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

  1. மேலப்பாளையத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  2. மேலப்பாளைய மக்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
  3. சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலப்பாளைய தெரு முனைகளில் மாநகராட்சி, வியாபாரிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  4. முக்கிய சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அனைத்து வாகனங்களும் இயங்க தடை விதிக்கப்படுகிறது. பொருட்கள் வாங்க ஒருவர் மட்டும் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
  5. உடல்நலக்குறைவு போன்ற அத்தியாவசிய தேவைக்காக மருத்துவ ஆவணங்களுடன் வெளிவரும் நபர்கள் குறித்து விவரங்களையும், அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பும் விவரங்களையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தனிப்பதிவேட்டில் பதிவு செய்து கண்காணித்திட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்ட வரும் நிலையில், ஒரு நகராட்சியே முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பது இதுவே முதன்முறையாகும்.

முஸ்லிம் அமைப்பான தப்லீக் ஜமாத்தின் இந்திய தலைமை அலுவலகம் டெல்லி நிஜாமுதீன் மசூதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு மத நிகழ்ச்சி கடந்த 8-ம்தேதி முதல் 10-ம்தேதி வரையில் நடைபெற்றது. 

அதில் பங்கேற்ற சுமார் 2 ஆயிரம் பேர், தலைமை அலுவலகத்திலேயே தங்கியுள்ளனர். மத்திய மாநில அரசுகள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரே இடத்தில் 2 ஆயிரம் பேர் தங்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், தங்கியிருந்தவர்களில் 400-க்கும் அதிகமானோருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்டு நகரின் வெவ்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Listen to the latest songs, only on JioSaavn.com