This Article is From May 13, 2020

கொரோனா தாக்கம் பெரியளவில் உயர்ந்து பின்னர் படிப்படியாக தான் குறையும்: முதல்வர் எடப்பாடி

அதிகமாக பரிசோதனை செய்வதாலேயே அதிகமான எண்ணிக்கை இருக்கிறது. அதிகமாக பரிசோதித்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இறப்பு சதவீதம் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான்.

கொரோனா தாக்கம் பெரியளவில் உயர்ந்து பின்னர் படிப்படியாக தான் குறையும்: முதல்வர் எடப்பாடி

கொரோனா தாக்கம் பெரியளவில் உயர்ந்து பின்னர் படிப்படியாக தான் குறையும்: முதல்வர் எடப்பாடி

ஹைலைட்ஸ்

  • கொரோனா தாக்கம் பெரியளவில் உயர்ந்து பின்னர் படிப்படியாக தான் குறையும்
  • தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன.
  • இந்நோய்த்தொற்று சற்று ஏறித்தான் இறங்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தாக்கம் பெரியளவில் உயர்ந்து பின்னர் படிப்படியாக தான் குறையும் என வல்லுநர்கள் கூறியுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் கூறியதாவது, "மத்திய, மாநில அரசுகள் கூறும் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் மிகச்சிறப்பான முறையில் கடைபிடித்து வருகின்றீர்கள். கொரோனா வைரஸ் நோயை பொறுத்தவரையில் சிறிய அளவில் பரவி, பின்னர் பெரியளவில் உயர்ந்து பின்னர்தான் படிப்படியாக குறையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

அப்படித்தான் பல்வேறு நாடுகளில் நடந்திருக்கின்றன. வெளிநாடுகளில் இந்நோய்த்தொற்று சிறிய அளவில் ஏற்பட்டு பின்னர் படிப்படியாக உயர்ந்து, அதன்பின்னர் தான் குறைந்துள்ளது. அதேபோல் தான் தமிழகம், இந்தியாவில் நிலைமை இருக்கிறது.

மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர்கள் வேகமாக செயல்பட்டதே காரணம். பொதுமக்கள் ஒத்துழைப்புக்கு ஏற்ப படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும். சில விதிமுறைகளை பின்பற்றி பல்வேறு கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

தொழில்கள், பொருளாதாரத்தை மீட்டெடுக்க உயர்மட்ட குழுவை அரசு அமைத்துள்ளது. நோய்ப்பரவலின் காரணமாக வெளிநாட்டில் இயங்கும் தொழில் நிறுவனங்கள் வேறு நாட்டுக்குச் செல்கின்றன. அந்த தொழில்களை நம் மாநிலத்திற்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், தலைமை செயலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அனைத்து துறை அதிகாரிகள், பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் நோய் பரவல் தடுப்பில் வெற்றி கண்டிருக்கிறோம்.

நோய் ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக சொல்கின்றனர். அதிகமாக பரிசோதனை செய்வதாலேயே அதிகமான எண்ணிக்கை இருக்கிறது. அதிகமாக பரிசோதித்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இறப்பு சதவீதம் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான்.

சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 0.67% தான் இறப்பு விகிதம். 27% பேர் குணமடைந்திருக்கின்றனர். 53 பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன. மற்ற மாநிலங்கள் இவ்வளவு பரிசோதனை செய்யவில்லை. அதனால் நோய்த்தாக்கம் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமாகி வீடு திரும்புவார்கள். இந்நோய்த்தொற்று சற்று ஏறித்தான் இறங்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.