This Article is From May 05, 2019

கோவையில் நீட் தேர்வு எழுத மாணவருக்கு உதவிய காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்!

கோவையில், நீட் தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர், மாணவர் ஒருவர் செய்வதறியாது, உதவிக்காக சுற்றிவருவதை கண்டுள்ளார்.

கோவையில் நீட் தேர்வு எழுத மாணவருக்கு உதவிய காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்!

காவலரின் செயல் தேர்வு மையத்தில் இருந்தவர்களின் பாரட்டுக்களை பெற்றது.

Coimbatore:

புகைப்படம் இல்லாமல், நீட் தேர்வு எழுத வந்த மாணவர் தேர்வு மையத்தில் இருந்து திரும்ப அனுப்பட்ட நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சரியான நேரத்தில் மாணவருக்கு செய்த உதவி அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் 155 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் இன்று நடைபெற்றது. இந்த தேர்வினை, 15 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

தமிழகத்தில் சுமார் 1 லட்சத்தி 40 ஆயிரம் மாணவர்கள் இந்தாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 19 ஆயிரத்தி 638 பேர் அரசு வழங்கும் நீட் பயிற்சி மையங்களில் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்பட 14 நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டது.

இந்நிலையில், கோவையில் நீட் தேர்வு நடைபெறும் நேஷனல் மாடல் பள்ளியில், காவலர் சரவணக்குமார் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மாணவர் ஒருவர் செய்வதறியாது, உதவிக்காக சுற்றிவருவதை கண்டுள்ளார்.

அப்போது, அந்த மாணவனை காவலர் விசாரித்துள்ளார். அதில், அந்த மாணவர் தேர்வுக்கு புகைப்படம் எடுத்து வர மறந்துவிட்டதாகவும், இதனால், தான் தேர்வு எழுத முடியாது என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதைகேட்ட காவலர், உடனடியாக அந்த மாணவனிடம் ரூ.40-ஐ வழங்கி புகைப்படம் எடுக்க உதவியுள்ளார். உடனடியாக புகைப்படம் எடுத்து வந்த மாணவன் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்துள்ளார்.

உரிய நேரத்தில் காவலர் செய்த அந்த உதவிக்கு தேர்வு மையத்தில் இருந்த அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

.