This Article is From Feb 28, 2020

டெல்லி கலவரம்: உதவி கோரி காவல்துறைக்கு வந்த அழைப்புகள் எவ்வளவு தெரியுமா?

2வது நாளான திங்கட்கிழமை மட்டும் காவல்துறைக்கு உதவிகள் கோரி 3,500 அழைப்புகள் வந்ததாக தகவல்.

டெல்லி கலவரம்: உதவி கோரி காவல்துறைக்கு வந்த அழைப்புகள் எவ்வளவு தெரியுமா?

Delhi violence: இந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். (AFP)

ஹைலைட்ஸ்

  • கலவரம் நடந்த 3வது நாளில் மட்டும் 7,500 அழைப்புகள் வந்துள்ளது.
  • வடகிழக்கு டெல்லி தற்போது சீராகி வருவதாக உள்துறை அமைச்சகம் தகவல்
  • வடகிழக்கு பகுதியில் மக்கள் கூட்டமாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
New Delhi:

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கிய கலவரம் அடுத்தடுத்து, 3 நாட்களாக நீடித்தது. இதில், 3வது நாளான செவ்வாய்க்கிழமை மட்டும் டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அதிகபட்சமாக 7,500 அழைப்புகள் உதவி கேட்டு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுதொடர்பாக பெயர் கூற விரும்பாத மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் என்டிடிவிக்கு அளித்த தகவலில், 2வது நாளான திங்கட்கிழமை மட்டும் காவல்துறைக்கு உதவிகள் கோரி 3,500 அழைப்புகள் வந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமையன்று 700 அழைப்புகள் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, புதன்கிழமையன்றும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 1,500 அழைப்புகள் உதவிக்கோரி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் அடுத்தடுத்து வளர்ந்து, பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் வன்முறையாளர்களால் வாகனங்கள், கடைகள், கட்டிடங்கள் தீ வைத்துச் சேதப்படுத்தப்பட்டது. 

இதையடுத்து, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யாத காரணத்தினாலும், கலவரத்தைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்காததாலும் டெல்லி காவல்துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்திலும், அடுத்தடுத்த நாட்களில் நடந்த போராட்டத்தின் போதும், போதுமான அளவு போலீசார் இல்லை என சமூகவலைத்தளங்களில் மக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். 

இந்த நிலையில், டெல்லியின் தற்போதைய நிலைமை குறித்துப் பரவலாக ஆய்வு செய்ய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். இதைத்தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் தற்போது நிலைமை முன்னேற்றமடைந்து வருகிறது. வடகிழக்கு பகுதிகளில் மக்கள் கூட்டமாகக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த தடையிலிருந்து, இன்று 10 மணி நேரம் மட்டும் விலக்கு அளிக்கப்படும், காலை 4 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8மண வரை மட்டும் இந்த விலக்கு இருக்கும். கடந்த 36 மணி நேரத்தில் பெரியளவில் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேபோல், டெல்லி காவல்துறை, இரு சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காகச் சமாதான கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நிலைமை இயல்பாகும் வரை இதுபோன்ற அமைதிக் குழுக் கூட்டங்கள் தொடரும் என்றும் இதுவரை 330 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

.