This Article is From May 16, 2019

சர்ச்சை பேச்சு: முன்ஜாமின் கோரி கமல்ஹாசன் மனு தாக்கல்!

இந்து தீவிரவாதம் என்ற கமலின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சர்ச்சை பேச்சு: முன்ஜாமின் கோரி கமல்ஹாசன் மனு தாக்கல்!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிறன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார். 

கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொல்லியதற்காக கமலின் நாக்கை வெட்ட வேண்டும். தீவிரவாதிகளுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என எந்த மதமும் கிடையாது. கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனிடையே, கமலுக்கு எதிராக கரூர் மாவட்டக் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கமல் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விடுமுறைக்கால அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விடுமுறைக்கால அமர்வு, ஒரு வழக்கை தள்ளுபடி செய்யவோ, தடை விதிக்கவோ இயலாது என கூறிய நீதிபதிகள், வேண்டுமென்றால் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துகொள்ளலாம்' என்று அறிவுறுத்தினர்.

அதனையடுத்து, தற்போது, கமல்ஹாசன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

.