This Article is From Sep 10, 2019

சர்ச்சையை ஏற்படுத்திய புகழேந்தி வீடியோ! என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்!

கட்சிக்காக போராடி சிறை சென்றவர்களை நீக்கியதே தவறு. அவர்களை சமாதானப்படுத்த சென்று அவர்களிடம் நான் பேசியதை வெளியிட்டது மேலும் தவறு என்று புகழேந்தி கூறியிருந்தார். 

சர்ச்சையை ஏற்படுத்திய புகழேந்தி வீடியோ! என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்!

திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை - தினகரன்

புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

கோவையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் கட்சியினருடன் அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பேசிய வீடியோ தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் இங்கு யாருடனும் இருக்கும் விருப்பம் எனக்கு இல்லை. டிடிவியை ஊர் ஊராகச் சென்று நான் தான் அடையாளப்படுத்தினேன். ஆனால் ஜெயலலிதா மரணத்தில் கூட அவர் உடன் இல்லை. இதனால் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன் எனப் பேசினார்.

இது குறித்து பேசிய புகழேந்தி, அதிருப்தியில் இருந்தவர்களை சமாதானப்படுத்தவே அவ்வாறு பேசியதாகவும், அவர்களை சந்தித்து பேசிய வீடியோவை அமமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. இது என்னை அசிங்கப்படுத்துவதாக உள்ளது. 

பாதி வீடியோ மட்டும் வெளியிட்டு உள்ளனர். முழு வீடியோவையும் வெளியிட்டு இருந்தால் உண்மை தெரியும். வீடியோவை வெளியிட்டது எந்த விதத்தில் நியாயம்?

கட்சிக்காக போராடி சிறை சென்றவர்களை நீக்கியதே தவறு. அவர்களை சமாதானப்படுத்த சென்று அவர்களிடம் நான் பேசியதை வெளியிட்டது மேலும் தவறு என்று அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் புகழேந்தி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். 

அமமுகவில் இருந்து அதிமுக செல்லாமல் திமுகவுக்கு நிர்வாகிகள் செல்வது அவரவரது விருப்பம் அதை துரோகம் என்று சொல்லமாட்டேன். ஏற்கனவே எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் தீர விசாரித்து எடுக்கப்பட்டவை. எனவே எல்லாவற்றையும் விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறினார்.


 

.