ராகுல் காந்தி தலைமையில் முதல் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடக்கிறது

நாடாளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு கோரும் காங்கிரஸின் காரிய கமிட்டி உறுப்பினர்களில் 3 பேர் மட்டுமே பெண்கள்

New Delhi:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்ற பிறகு நடக்கும் முதல் காரியக் கமிட்டிக் கூட்டம் இது. ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் இந்த கூட்டம், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்து 2 நாட்களில் நடப்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பிரதமரை விமர்சித்த ராகுல் காந்தியின் கடுமையான பேச்சும், சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான பிரதமருக்கு கொடுத்த கட்டிப் பிடி வைத்தியமும், தேர்தலை நோக்கிய காங்கிரஸின் பயணத்துக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்திருக்கிறது.

எதிர்கட்சிகளுடன் இணைந்து, அடுத்து ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் நரேந்திர மோடியின் அரசை எதிர் கொள்வோம் என்று முன்னதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். இன்று நடைபெற இருக்கும் கூட்டத்தில், இது பற்றி ஆலோசனை நடக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அக்கட்சியின் உயர்மட்டக் குழு, கூட்டணி குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜூலை 17-ம் தேதி, காங்கிரஸ் காரிய கமிட்டியில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தார் ராகுல் காந்தி. திக் விஜய் சிங், ஜனார்தன் திவேடி, கமல் நாத், சுஷில் குமார் ஷிண்டே, மற்றும் கரன் சிங் ஆகிய முக்கிய தலைவர்கள் நீக்கப்பட்டனர். ஏகே.ஆண்டனி, அகமது படேல், அம்பிகா சோனி, மோத்திலால் வோரா, குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் ஷர்மா மற்றும் குமாரி செல்ஜா ஆகியோரை கமிட்டியில் சேர்த்தார். 

Newsbeep

புதிய காரிய கமிட்டியில் 23 உறுப்பினர்கள், 19 நிரந்திர அழைப்பாளர்கள் மற்றும் 9 சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு கோரும் காங்கிரஸின் காரிய கமிட்டி உறுப்பினர்களில் வெறும் 3 பேர் மட்டுமே பெண்கள்.

இன்றைய கூட்டத்துக்கு, அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களையும், சட்டமன்ற கட்சி தலைவர்களையும் அழைத்துள்ளார் ராகுல். முன்னாள் காங்கிரஸ் முதல்வர்களான, அசோக் கெலோட், உம்மன் சாண்டி, தருண் கோகாய், சித்தராமைய்யா மற்றும் ஹரிஷ் ராவத் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.