“அதை மட்டும் செய்தால் காங்கிரஸ் 24 மணி நேரத்தில் உடையும்!”- சொல்கிறார் முன்னாள் அமைச்சர்

ராகுல் காந்தி, தலைவர் பதவியை ராஜினாமா செய்து 50 நாட்கள் கடந்துவிட்டன.

“அதை மட்டும் செய்தால் காங்கிரஸ் 24 மணி நேரத்தில் உடையும்!”- சொல்கிறார் முன்னாள் அமைச்சர்

ராகுலுக்கு பதிலாக பிரியங்கா காந்தி, தலைவராக வர வேண்டும் என்றும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது

New Delhi:

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்ததில் இருந்து, கட்சிக்குள் அவரது முடிவுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்து வருகிறது. மேலும், அவருக்கு பதிலாக பிரியங்கா காந்தி, தலைவராக வர வேண்டும் என்றும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், “ராகுல் காந்தி இல்லாத பட்சத்தில் பிரியங்கா காந்தி, கட்சியின் தலைவராக இருக்க வேண்டும். காந்தி குடும்பத்தில் இல்லாத ஒருவர் தலைவரானால், கட்சி உடையும்” என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங். 

அவர் மேலும் இது குறித்து பேசுகையில், “சொன்பத்ரா விவகாரத்தில் பிரியங்கா செய்த செயல் துணிச்சலானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்க்க விடவில்லை என்பதற்காக அவர் பின்வாங்கவில்லை. தொடர்ந்து அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டு, வேலையை முடித்துக் காண்பித்தார். 

காந்தி குடும்பத்திலிருந்து அடுத்த காங்கிரஸ் தலைவர் வரக் கூடாது என்று ராகுல் சொல்லியதை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னர் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகனான அனில் சாஸ்திரி, “பிரியங்கா காந்திதான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும். அவரைத் தவிர வேறு யார் பொறுப்புக்கு வந்தாலும் அதை 100 சதவிகிதம் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறினார். 

அவர், “வேறு யாராவது காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் பட்சத்தில், அவரை ஏற்காத ஒரு பிரிவு கட்சியிலிருந்து விலகும்” என்று எச்சரித்தார். இதே கருத்தை நட்வர் சிங்கும் கூறியுள்ளார். “134 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கட்சிக்குத் தலைவர் இல்லை என்பது வருத்தத்தக்குரியது. காந்தி குடும்பத்தில் அல்லாத ஒருவர் கட்சியின் தலைவராவது சரியாக இருக்காது. அப்படி ஆனால், இந்தக் கட்சி 24 மணி நேரத்தில் உடையும்” என்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார். 

ராகுல் காந்தி, தலைவர் பதவியை ராஜினாமா செய்து 50 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், இதுவரை தனது அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தவித்து வருகிறது காங்கிரஸ். 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இந்த படுதோல்விக்குப் பொறுப்பேற்றுதான் ராகுல் காந்தி, தனது தலைவர் பதவியைத் துறந்தார். சில நாட்களுக்கு முன்னர் இது குறித்தும் 4 பக்கக் கடிதத்தை அவர் எழுதி, பொதுப் பார்வைக்கு வெளியிட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. 

Listen to the latest songs, only on JioSaavn.com