தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!!

டெல்லியில் உள்ள சரத் பவார் இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதே நேரத்தில் சிவசேனாவின் சஞ்சய் ராவத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் அஷ்வனி குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மகாராஷ்டிர அரசியல் சிக்கல் நாளைக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

New Delhi:

மகாராஷ்டிர அரசியல் விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் 3 கட்சிகள் இடையே விரைவில் உடன்பாடு எட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சம்மதம் தெரிவித்து விட்டார் என தகவல்கள் வெளியானது. இதேபோன்று, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், நாளை மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பது தெரிந்து விடும் என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், 3 கட்சி தலைவர்களும் ஆலோசனை நடத்தி வருவது என்பது, 3 கட்சிகளும் உடன்பாட்டிற்கு வந்துவிட்டன என்பதை சொல்லுவதுபோல் அமைந்துள்ளது. 

முன்பு மகாராஷ்டிர அரசியல் விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அளித்த பேட்டி, சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்த கட்சிகள் அவர்களது பாதையில் செல்கின்றன. நாங்களும், காங்கிரசும் எங்களது பாதையில் செல்கிறோம் என்று சரத்பவார் கூறியிருந்தார். 

சிவசேனா, காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியைமப்பீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, 'உண்மையாகவா?' என்று கிண்டலாக பதில் கூறினார். 

இதற்கிடையே, குடியரசு தலைவர் பதவியை சரத்பவார் கேட்பதாகவும், இதற்கு உடன்பட்டால் மட்டுமே ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் சம்மதிக்கும் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், டெல்லி 3 கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். 

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

தேர்தலுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, முதல்வர் பதவியில் பங்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பாஜக-வுக்கு வைத்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிகாரப் பகிர்வு கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து செயல்படத் தொடங்கியுள்ளனர். 

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி இறுதியாகும் நிலையில் இருக்கின்றது.

More News